விருதுநகர் அருகே உள்ள முத்துசாமி புரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில், இன்று (17-02-24) வழக்கம் போல பட்டாசு ஆலையில் வேலைகள் நடந்து வந்த நிலையில், மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் கிட்டத்தட்ட 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் என்றும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், வெடி விபத்து தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விபத்து குறித்து ஆய்வு நடத்திய பின் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசுகையில், “விதிகளை மீறி அதிகளவு ரசாயன மூலப் பொருட்களைச் சேமித்து வைத்ததே விபத்துக்கான காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும். மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலை விதி மீறலைத் தடுக்க 4 குழுக்கள் கண்காணித்து வருகிறது” என்று கூறினார்.