நாமக்கல் மாவட்டத்திற்குப் புதிய கலெக்டராக ஸ்ரேயா சிங் 17ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, அவர் உடனடியாக அன்று மாலையில் அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், கரோனா நோய்தொற்று நடவடிக்கை குறித்து ஆய்வுசெய்து அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனைக்குச் சென்ற அவர், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து இதுவரை நடைபெற்ற நடவடிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பிறகு அங்குள்ள கரோனா வார்டுக்கு, கலெக்டர் ஸ்ரேயாசிங் பாதுகாப்பு கவச உடையணிந்து சென்றார். அப்போது, அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார். நோயாளிகளின் நுரையீரல் தொற்றின் அளவு குறித்து சி.டி ஸ்கேன் அறிக்கை, தொற்றின் தன்மை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் டாக்டர்கள் கலெக்டருக்கு விளக்கினார்கள். அப்போது நோயாளிகளிடம் பேசிய அவர், மருத்துவர்களும் செவிலியர்களும் வார்டுக்கு வந்து சிகிச்சை அளிக்கிறார்களா? எனக் கேட்டார்.
மருத்துவ உதவி உடனுக்குடன் நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்தார். மேலும் உணவு வழங்கப்படுவது குறித்தும், தரம் மற்றும் சுவையின் திருப்தி குறித்தும் நோயாளிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி உடனிருந்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் இந்த நோய் தொற்றுக்குள்ளான மக்களிடம் நேரில் சென்று நம்பிக்கை கொடுத்துவருகிறார்கள்.