தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தெப்பக்குளங்களில் ஒன்று எட்டயபுரம் கிருஷ்ணன் கோவில் நல்ல தண்ணீர் தெப்பக்குளம். கடந்த பல ஆண்டுகளாக வறண்டு போய் காட்சியளித்த தெப்பக்குளத்தில் தற்போது பெய்துவரும் தொடர் மழையால் நீர் நிரம்பி வருவது எட்டயபுரம் மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இது 204.8 மீட்டர் நீளம் அகலம் உடையது. சதுர வடிவிலான குளத்தின் நான்கு புறமும் 12 அடி உயரமுள்ள படிக்கட்டுகளும் குளத்தின் தரையிலிருந்து 15 அடி உயரம் கொண்ட கற்களால் ஆன சுவர்களும் எழுப்பப்பட்டுள்ளன. பிதப்புரம் பாண்டியன் கண்மாய், சிவசங்கரன் பிள்ளை கண்மாய், அட்டை குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீர்வழித்தடங்கள் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கு முன்பு எட்டயபுரம் சமஸ்தானம் மகாராஜா காலத்தில் கட்டப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தின் மையப்பகுதியில் நாழி கிணறு உள்ளது.
தெப்பக்குளத்தின் மேற்கு படித்துறை பகுதியில் கிருஷ்ணர் கோவிலும், கல் மண்டபமும் உள்ளது. நீண்ட நெடுங்காலமாக எட்டயபுரம் மக்களின் குடிதண்ணீர் ஆதாரமாக இந்த தெப்பக்குளம் இருந்துள்ளது. ஆகவே 24மணி நேர பாதுகாவலர்கள் கண்காணிப்பில் மன்னர்கள் காலத்தில் முழு சுகாதாரத்தோடு திகழ்ந்திருக்கிறது. காலப்போக்கில் அரசு நிர்வாகத்தின் கீழ் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட போது தெப்பக்குளமும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதன்பிறகு பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததாலும், நீர்வரத்து பாதைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளானதாலும் தெப்பக்குளம் வறண்டு போய் புதர் மண்டி காட்சிப்பொருளாக மாறிப்போனது.
தற்போது தமிழக அரசு செயல்படுத்திவரும் குடிமராமத்து பணிகள் மற்றம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஊருக்கு நூறு கை திட்டங்களின் மூலம் எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் குடிமராமத்து பணிகள், நீர்வரத்து பாதைகள் தூர்வாரப்பட்டதன் விளைவாக எட்டயபுரம் கிருஷ்ணன் கோவில் தெப்பக்குளத்திற்கு மழைநீர் வரத்து தொடங்கியுள்ளது. கடந்த 10 நாள்களாக எட்டயபுரம் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து தெப்பக்குளம் நிரம்பி வருகிறது. இதனை கண்டு எட்டயபுரம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுமார் 25 அடி ஆழமுள்ள இந்த தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பினால் வானம் பார்த்த பூமியான எட்டயபுரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என்கின்றனர் விவசாயிகள்.
அதே வேளையில், சுகாதார சீர்கேடுகளுடன் சுற்றுச்சுவர்களில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கும் தெப்பத்தை பேரூராட்சி நிர்வாகம் சீரமைத்து பராமரிக்க வேண்டுமென எட்டயபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.