மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் லட்சக் கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டம் 19வது நாளாக நீடித்துவருகிறது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், 14ஆம் தேதி முதல், தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஈரோடு, அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியார் காலி இடத்தில், இன்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது. போராட்டத்திற்கு, இந்திய விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி, சுப்பு, பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு ம.தி.மு.க எம்.பி. கணேசமூர்த்தி கலந்துகொண்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
ஈரோடு தி.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி, துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.
இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதேபோன்று பெண்களும் அதிக அளவில் வந்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.