ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலமுருகன் கோவிலில், சூரசம்கார நிகழ்வு குறைந்தளவு பக்தர்களுடன், கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
இக்கோவிலின் தல வரலாற்றுப்படி, முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஒருமுறை கொங்கு நாட்டிற்கு வந்துள்ளார். குன்னத்தூர் அருகே சிவ பூஜை செய்யச் சரியான இடத்தை தேட முற்பட்டார். அப்போது ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள மொடச்சூர் என்னும் ஊர்தான், சிவ பூஜை செய்யச் சரியான இடம் என்பதை அவரின் ஞான திருஷ்டியால் உணர்ந்து, அங்கு சென்று சிவ பூஜை செய்ய முற்படுகிறார். அப்போது குறை தீர்க்கும் குமரக் கடவுளான முருகனை, காண எண்ணி அவரது மனம் பூஜையில் திளைக்க மறுக்கிறது.
குறை தீர்க்கும் குகனை எண்ணி தவத்தால் அருகில் உள்ள பச்சமலை என்னும் குன்றை அடைகிறார். அங்கு அவருக்கு பாலதண்டாயுதபானியாக முருகன் காட்சி அளிக்கிறார். அவரின் வேண்டுகோளை ஏற்று, இறைவன் பச்சமலையில் நிலையாகக் குடி கொள்கின்றான். துர்வாசர், முருகனை மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்கிறார். இவ்வாறு பிரசித்தி பெற்ற அருள்மிகு பச்சமலை பாலமுருகன் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கந்த சஷ்டி சூரசம்ஹாரவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
சூரசம்ஹாரம் என்பது சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வாகும். சூரபத்மனை முருகன் அழித்தார். அதன் நினைவாக முருகனுடைய ஆலயங்களில் இந்த நிகழ்வினை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். பச்சமலை பாலமுருகன் கோவிலில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 15 -ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று விரதமிருக்கும் பக்தர்கள் கைகளில் காப்புக் கட்டி சஷ்டி விரதம் மேற்கொண்டனர். விழாவில் 6 -ஆம் நாளான இன்று காலை, சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது.
இன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர், யாகசாலையில் இருந்து சுவாமி சப்பரத்தில் கோவில் பிரகாரத்தில் உள்ள சன்னதிகள் முன் எழுந்தருளினார். அங்கு சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அங்கிருந்து சூரசம்ஹாரத்துக்காக கோவில் சுற்று வளாகத்தில் முருகன் எழுந்தருளினார். வழக்கமாக சூரசம்ஹாரத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவார்கள்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதனால் குறைந்தளவு பக்தர்களே கலந்துகொண்டனர். சூரனை வதம் செய்யும் நிகழ்வு, கோபிசெட்டிபாளையம் நகர்ப் பகுதி முழுவதும் வலம் வந்து நடைபெற்ற நிலையில், இந்தாண்டு கரோனா நோய்த் தடுப்பால், கோவில் வளாகத்திலேயே கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் முருகன் பிரகாரத்திற்குப் பன்னீர் தெளித்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்வைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்த போது, மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஏமாற்றமடைந்தனர்.