ஈரோடு இடைத்தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடர்ச்சியாக ஈரோட்டில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் திமுக சார்பில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் சீமான் பெரியார் குறித்து அவதூறு பரப்பியதாக பெரியாரிய இயக்கங்கள் சென்னையில் உள்ள அவரது அவருடைய வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி பரப்புரைகளில் பேசி வரும் சீமான் தொடர்ச்சியாக பெரியார் குறித்து பேசி வருகிறார். இந்நிலையில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பரப்புரைக்காக இன்று வந்துள்ளனர்.
செய்தியாளர்களை சந்தித்த திருமுருகன் காந்தி, ''இந்த மண்ணின் தலைமகன் பெரியாருடைய தொண்டை மறுபடியும் நினைவு கூற ஒரு வாய்ப்பாக இந்த தேர்தல் பரப்புரையை நாங்கள் பார்க்கிறோம். இந்த தேர்தல் பரப்புரை மூலம் சீமானுடைய திரிபுவாத அரசியலை அம்பலப்படுத்துவோம். சீமானும் பாஜகவும் தங்களுக்கான பொதுவேட்பாளராக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளார்கள். நாம் தமிழர் நிறுத்தியுள்ள வேட்பாளர் பாஜகவிற்கும் நாம் தமிழருக்குமான பொதுவேட்பாளர். ஜெயலலிதாவை சீமான் இழிவாக பேசியுள்ளார். திமுகவை பற்றி இழிவாக பேசி வருகிறார். பெரியாரை பற்றி இழிவாக பேசி வருகிறார்.
சீமான் குறித்து பல்வேறு பொய்கள் இப்பொழுது வெளியாகிக் கொண்டிருக்கிறது. எல்லா வகையிலும் பித்தலாட்டக்காரராக இருக்கும் சீமானை இந்த மக்கள் அடையாளம் காண வேண்டும் என்பதற்காக பரப்பரைக்கு வந்திருக்கிறோம். விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பாக தந்தை பெரியார் நடத்திய சாதியை ஒழிக்க சட்ட எரிப்பு போராட்டம் என்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தில் பங்கெடுத்து சிறைச்சென்ற சோழபுரம் முருகேசனின் பேத்தி இங்கு வேட்பாளராக களம் இறங்குகிறார். அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறோம்.
சீமானுடைய பொய்யான பரப்புரையை அம்பலப்படுத்தும் விதமாக எது உண்மையான தமிழ் தேசியம் என்பதை மக்களுக்கு சொல்வதற்காக மே 17 இயக்கமும் அதன் தோழர்களும் ஈரோடு கிழக்கில் இறங்கி உள்ளோம். வீதி வீதியாக சென்று சீமானை அம்பலப்படுத்துவோம். மற்றவர்கள் ஏதாவது பேசினால் உடனடியாக வழக்கு பாய்கிறது. கைது நடவடிக்கை மேற்கொள்கிறார்கள், சிறையில் அடைகிறார்கள், ஆனால் இவ்வளவு தூரம் சீமானை பேச விட்டிருப்பது ஏன்? என திமுக அரசுக்கு கேள்வி எழுப்புகிறோம். சீமானின் அரசியலை அம்பலப்படுத்த வந்திருக்கிறோம். பார்த்து விடுவோம் யார் என்பதை பார்த்து விடுவோம். சீமானுக்கு நேரடியாக சவால் விடுகிறேன்''என்றார்.