அட, எருமை... மாடே... என கோபமாகவும் கிண்டலாகவும் சிலரை சிலர் அழைக்கும் வழக்கம் இருக்கத்தான் செய்கறது. ஆனால் உண்மையில் எருமையானாலும், பசுமாடானாலும் அவைகள் தன்னை வளர்க்கும் மனிதனுக்காக உழைப்பையும் விற்பனை என்ற பொருளாதாரத்தையும் கொடுக்கிறது.
மாட்டுச் சந்தைக்கு பெயர் பெற்றது ஈரோடு. இங்குள்ள கருங்கல்பாளையம் என்ற பகுதியில் வாரம் தோறும் வியாழக்கிழமை இந்த சந்தை கூடுகிறது. இதற்காக கேரளா ,கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள்.
கடந்த சில வாரங்களாக நடந்த சந்தையில் மாடுகள் குறைந்த அளவே வந்திருந்தன. இதனால் மாட்டு சந்தை களையிழந்து காணப்பட்டது.
இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதையொட்டி மாடுகளுக்கு தீவன பற்றாக்குறையால் சென்ற வாரம் நடந்த சந்தையிலிருந்து மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. இன்று நடந்த சந்தையிலும் மாடுகள் வந்ததும் அதிகமாக இருந்தது. 750 எருமை மாடுகளும், 250 பசு மாடுகளும், 200 வளர்ப்பு கன்றுகளும் இங்கு வந்து விற்பனையானது.
இன்றைய சந்தையில் மகாராஷ்டிராவில் இருந்துதான் அதிக அளவு வியாபாரிகள் வந்திருந்தனர் அவர்களே 90 சதவீத மாடுகளை விலைக்கு வாங்கிச் சென்றனர். இதேபோல் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.
கோடை காலத்தில் தீவன பற்றாக்குறையால் மாடு வளர்க்கும் விவசாயிகள் அதற்கு செலவு கட்டுபடியாகாமல் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு தீவனம் குறைந்த விலையில் அரசு கொடுக்குமா? அல்லது மாட்டின் காவலர்கள் என கூறும் ஒரு சில அமைப்பினர் கொடுக்கலாமே...?