நக்கீரன் ஆசிரியர் கோபாலை உடனே விடுதலை செய்! கவர்னர் பன்வாரிலாலை திரும்பப்பெறு! தமிழகத்தில் பாசிசம் தலைவிரித்தாடுகிறது. எதற்கு எடுத்தாலும் தேசதுரோக வழக்கா?
“ஹைகோர்ட்டை பற்றி அவதூறாகவும், தமிழக போலீஸ் அனைவரும் லஞ்சப்பேர்வழிகள்“ எனப் பேசிய எச்.ராஜாவிற்கு கவர்னர் மாளிகையில் விருந்து. பெண்கள் சமூகத்தையே கேவலமாக பேசிய எஸ்.வி. சேகர் அரசு மரியாதையுடன் உலா வருகிறார். தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம். பேராசிரியரே மாணவிகளை பல்கலைகழக அதிகாரிகளுக்கும், கவர்னர் மாளிகை வட்டாரத்திற்கும் பாலியல் இச்சைக்கு கூட்டிகொடுக்க முயன்றதை அம்பலபடுத்தினால் தேசத்துரோக வழக்கில் கைதா?.
இது என்ன நாடா? பேசத் தடை, பாடத் தடை, கூட்டம் நடத்தத் தடை, நடந்து போகத் தடை, படம் வரையத் தடை, ஆறுதல் சொல்லத் தடை, பிரசுரம் கொடுக்கத் தடை, போஸ்டர் ஒட்டத் தடை, எழுதத் தடை, போராடத் தடை, பத்திரிக்கை ஊடகங்கள் அச்சுறுத்தி முடக்கம், இதுதான் ஜனநாயக ஆட்சியின் அருகதை. இனியும் எதிர்த்து போராட அஞ்சினால், தயங்கினால், பின்வாங்கினால் நாயினும் கீழாக நடத்தப்படுவோம். அடக்குமுறைகளுக்கு எதிராக அனைவரும் களத்தில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை என ஆசிரியர் நக்கீரன் கோபால் கைதிற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.