பாஜகவால் பின்புலத்திலிருந்து இயக்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வேதாந்தா குழும முதலாளியின் எடுபிடியாக மாறிவிட்டது. மக்களின் உயிரை குடிக்கும் ஆலையை மூடுமாறு கோரியதால் ஆத்திரமடைந்து முதலாளியின் மனம் குளிர சொந்த மக்களை கொலை செய்துள்ளது. இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மறியல் மற்றும் கடையடைப்பு நடத்த சிபிஐ (எம்) வேண்டுகோள் தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் மாசடைந்து மக்கள் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கடந்த 100 நாட்களாக சுற்றுப் பகுதி கிராம மக்கள் அமைதியான முறையில், அறவழியில் போராடி வந்தனர்.
செவ்வாயன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற போது, போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதோடு, தடியடி நடத்தி மக்களை விரட்டியுள்ளனர்.
இந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக போலீசார் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். கிசிச்சைக்காக அனுமதிக்கப் பட்டவர்களையும் கூட போலீசார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்கியுள்ளனர்.
தூத்துக்குடி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புகுந்து போலீசார் அப்பாவி பொதுமக்களை நரவேட்டையாடியுள்ளனர். ஆயிரக்கணக்கில் போலீசாரை குவித்து கோரத் தாண்டவம் ஆடி மக்களை கொன்று குவித்துள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்.
தாக்குதலுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாஜகவால் பின்புலத்திலிருந்து இயக்கப்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வேதாந்தா குழும முதலாளியின் எடுபிடியாக மாறிவிட்டது. மக்களின் உயிரை குடிக்கும் ஆலையை மூடுமாறு கோரியதால் ஆத்திரமடைந்து முதலாளியின் மனம் குளிர சொந்த மக்களை கொலை செய்துள்ளது.
தமிழகத்தில் நோக்கியா உள்ளிட்ட ஆலைகளை முதலாளிகள் மூடிவிட்டுச் சென்ற போது அதிமுக அரசு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது. ஆனால் தற்போது எங்கள் உயிருக்கு உலை வைக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு என்று கோரி மக்கள் போராட்டம் நடத்தினால் காக்கை குருவிகளை போல சுட்டுத் தள்ளுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் உடனடியாக மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டங்களில் ஈடுபடுமாறு கட்சி அணிகளை கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியுள்ள ஆட்சியாளர்களை கண்டித்து ஒன்றிணைந்து போராட முன்வருமாறு என அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.