ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. பணபலம் மற்றும் அதிகார பலம் ஆகியவையும் பாஜக கட்சிக்கு இருக்கிறது. இவ்வாறு அத்தனை பலம் இருந்த போதிலும் ஹரியானாவில் 31 இடம்தான் கிடைத்தது. மகாராஷ்டிராவில் தனியாகவே 150 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் வலிமை கிடைக்கும் என்று சொல்லிவந்தார்கள். ஆனால் மகாராஷ்டிராவில் 105 இடங்கள்தான் கிடைத்தது.
ஹரியானாவில், தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஆட்சி அமைத்துள்ளனர். அதுவும் நிலையான ஆட்சி இல்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஆட்சி அமைந்துள்ளது. மகாராஷ்டிராவில் புழக்கடை வழியாக ஆட்சி அமைக்க பாஜக முயன்றபோது தோற்கடிக்கப்பட்டது, ஜார்க்கண்டில், இப்போது முழுமையான தோல்வியை பாஜக கண்டுள்ளது. பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல; எதிர்க்கட்சிகள் ஓரணியாக இணைந்தால் தோற்கடிக்க முடியும்" என தெரிவித்தார்.