பழைய பகையை மறந்து பாமகவுடன் அதிமுக கூட்டணி உறவு வைத்துக் கொண்டாலும், அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள், அதிமுகவினரிடையே ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக-பாமக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 22-ஆம் தேதி திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அதிமுகவினருக்கு விருந்து கொடுத்தார் ராமதாஸ். இதில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மூத்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற விழுப்புரம் தொகுதி அதிமுக எம்பி. ராஜேந்திரன், மறுநாள் (பிப். 23-ஆம் தேதி) காலை திண்டிவனம் அருகே சாலை விபத்தில் காலமானார். அதற்கடுத்த நாள், வாழப்பாடி அருகே கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்பி காமராஜ் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதன்பிறகு, கரூர் அருகே போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்ற காரும் விபத்தில் சிக்கியது. இதில் அமைச்சருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், இன்று காலை சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டுச் சென்ற தனியார் விமானம், புறப்பட்ட 10-வது நிமிடத்திலேயே இயந்திரக் கோளாறு காரணமாக சென்னை திரும்பியது. அந்த விமானத்தில்தான், கன்னியாகுமரி நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். இதையடுத்து, 9 மணிக்கு மதுரை செல்லும் மற்றொரு தனியார் விமானத்தில் முதல்வர் பயணம் செய்தார்.
அதிமுக-பாமக-பாஜக கூட்டணி ஒப்பந்தம் கடந்த பிப்.19-ஆம் தேதி கையெழுத்தானது. அதன் பிறகு பிரதமர் மோடியோடு இன்று கரம் கோர்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், போகும் வழியிலே தடங்கல் ஏற்பட்டது அதிமுகவினரிடையே ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல் கோணல் முற்றிலும் கோணல் எனச் சொல்வதுபோல் எதுவும் ஆகிவிடுமோ என்று அக்கட்சியினருக்கு கிலி ஏற்பட்டிருக்கிறது.
இதனிடையே, குமரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிஜேபி பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சித் தலைவர்களை மேடை ஏற்றவேண்டும் என பிஜேபி தலைமை கூறியிருந்தது. ஆனால், தேமுதிக பிடிகொடுக்காமல், மதில்மேல் பூனையாக இருக்கிறது. ராமதாஸோ ‘இருக்கிறோம்; ஆனா இல்லை’ என்கிற ரீதியில் நடந்து வருகிறார். தேமுதிக ஒத்துவராததும், ராமதாஸ் ஒத்துழைக்காததுமே, இன்றைய பொதுக்கூட்டத்தை பிஜேபி ரத்துச் செய்ததற்கான காரணமாகப் பேசப்படுகிறது. ஆனாலும், குமரி மாவட்ட அரசு விழாவில் பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடியும் கலந்துகொண்டனர்.
தெய்வ பக்தியில் திளைத்து வருவதோடு, ஜாதகத்தையும் ஆராய்ந்து வேட்பாளரைத் தேர்வு செய்வர். சோழி உருட்டி பிரசன்னம் பார்ப்பதும் உண்டு. அதனாலோ என்னவோ, சாவு, விபத்து, தடங்கல் என தொடர்ந்து நிகழ்வதால், ‘சகுனம் சரியில்லியே’ என்று சங்கடப்படுகின்றனர்.