ஈரோடு கைகாட்டி வலசு பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டில் இளம் பெண்கள், இளைஞர்கள் அடிக்கடி வந்து செல்வதாக மதுவிலக்கு டி.எஸ்.பி. பவித்ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அந்த வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது வீட்டில் இருந்த வாலிபர்கள், இளம் பெண்கள் போதை மயக்கத்தில் சுயநினைவின்றி இருந்துள்ளனர். அங்கு மாத்திரை கவர், இன்ஜக்சன் டியூப், நீடில், பயன்படுத்தப்படாத மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அங்கு இருந்தவர்கள் ஈரோடு நகரை ஒட்டிய பல்வேறு பகுதியை சேர்ந்த 21 வயது முதல் 26 வயது வரையிலான 5 இளைஞர்கள் ஆவர். இவர்களுடன் 20 வயது மற்றும் 23 வயது இளம் பெண்கள் இருவரும் இருந்துள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து 86 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா மற்றும் இரு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மதுவிலக்கு போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் இருந்த ஒரு இளைஞரின் தந்தை ஒருவர் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் கூறியதாவது, "பிடிபட்ட 7 பேரும் உடல் வலி போக்க டாக்டர்களால் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மாத்திரைகளை வாங்கி தூளாக்கி நீரில் கலந்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தி போதை ஏறும் என்பதற்காக பயன்படுத்தி உள்ளனர். மாத்திரையாக போட்டால் தூக்கம் வரும். மாறாக தூளாக்கி நரம்பில் செலுத்தினால் போதை ஏறும். 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை 300 ரூபாய்க்கு கிடைக்கும். ஆனால் போதை ஆசாமிகளுக்கு ரூ. 4,000 வரை விற்கப்படுகிறது. ஊசியால் இந்த மாத்திரைகளை நரம்பில் செலுத்தினால் 5 மணி நேரம் வரை போதை இருக்கும். இந்த 7 பேரும் மாத்திரைகளை வாங்கி தங்கள் உடலில் செலுத்திக்கொண்டு மீத மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர்.
பொதுவாக இந்த மாதிரி மாத்திரைகள் மெடிக்கலில் டாக்டர்கள் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் கொடுக்க மாட்டார்கள். ஆனால், மெடிக்கலில் வேலை செய்யும் நபர்கள், விற்பனை பிரதிநிதிகள் சிலர் இந்த கும்பலுக்கு போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக வழங்கி உள்ளனர். அவர்களும் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி அதனை விற்பனையும் செய்துள்ளனர். இந்த கும்பல் கொடுத்த தகவலின் பெயரில் இவர்களுக்கு போதை மாத்திரைகள் வழங்கிய மெடிக்கல் ஊழியர்கள், மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கும்பலுடன் மேலும் பலருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவர்கள் குறித்த விபரங்களையும் சேகரித்து வருகிறோம். பிடிபட்டவர்கள் அனைவரும் 19 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள். இந்த கும்பல் இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டுள்ளது" என்று கூறினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோபி சிறையிலும், இளம் பெண்கள் இருவரும் திருப்பூரில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.