ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தின் பின் பகுதியில் மாவட்ட குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவில் ஏலச்சீட்டு மோசடி, நில மோசடி, அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்ட குற்றப்பிரிவுக்கென ஒரே ஒரு டி.எஸ்.பி பணியிடம் மட்டும் தமிழக காவல் துறை மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணியிடங்களான இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள் என யாரும் நியமிக்கப்படவில்லை.
இதையடுத்து மற்ற போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் பிற பிரிவுகளில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்களை, தற்காலிக முறையில் மாவட்ட குற்றப்பிரிவில் நியமித்து வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரை கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றும் பிற பிரிவு போலீசார்களை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை அல்லது பந்தோபஸ்து(பாதுகாப்பு) பணியின்போது அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களின் சார்பாக சென்று விடுகின்றனர்.
இதனால், மாவட்ட குற்றப்பிரிவில் உள்ள வழக்குகள் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீஸ் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதில், நடப்பாண்டுடன் சேர்த்து மாவட்ட குற்றப்பிரிவில் மட்டும் 40 குற்ற வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே, தேக்கம் அடைந்துள்ள குற்ற வழக்குகளையும், புதிதாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உரிய விசாரணை அதிகாரிகள் மற்றும் போதிய போலீசார்களை நியமிக்க காவல் துறை நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.