![Elephant](http://image.nakkheeran.in/cdn/farfuture/BPKf0bPahxzLtbruRr9XTBdwPFiVys2t16FufRQ-Kj8/1592593622/sites/default/files/inline-images/elephant_5.jpg)
வன விலங்குகள் வாழ்விடமான காட்டுப் பகுதிகளில் அவைகளின் இயற்கையான வாழ்வியல் முறைகளைப் பார்ப்பதே அரிதானது. காட்டு யானைகளை வனப்பகுதியில் பலரும் பார்க்கலாம்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியையொட்டி காராச்சிக்கொரை மற்றும் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் பவானிசாகர் அணை நீர்தேக்கத்திற்கு வந்து தண்ணீர் குடித்துவிட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில் பவானிசாகர் அணையின் கரையை ஒட்டிய பகுதியில் உள்ள முட்புதர் காட்டில் மூன்று காட்டு யானைகள் சில நாட்களாக முகாமிட்டுள்ளன.
இந்தக் காட்டு யானைகள் கீழ்பவானி வாய்க்காலில் நீர் மின்சாரம் எடுக்கும் பகுதியிலிருந்து மின்வாரிய சாலையில் நடமாடுவதோடு அப்பகுதியில் உள்ள செடிகொடிகளைத் தீவனமாக உட்கொள்கின்றன. பின்னர் பவானிசாகர் அணை பூங்காவையொட்டி அமைந்துள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி அவைகள் தண்ணீர் குடித்துவிட்டு நீரில் மூழ்கி ஆனந்தமாகக் குளித்து விளையாடி மகிழ்கின்றன.
18.06.2020 வியாழக்கிழமை மதியம் மூன்று காட்டு யானைகள் வாய்க்காலில் இறங்கி விளையாடியதை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து ரசித்தனர். பகல் நேரங்களில் பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள முட்புதர் காடுகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்க்கச் செல்வோர் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுப்பணித் துறை மற்றும் வனத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.