ஈரோடு மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சில முன்னணி நிறுவனங்களின் பெயர்களைக் கூறி, அரசு அலுவலகங்கள், தனியார் துறை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் செய்தி வெளியிடுவோம் என்று மிரட்டி, பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் சில போலி பத்திரிகையாளர்கள் பிடிஎஃப் வடிவில் வாட்ஸ் ஆப் மூலம் பத்திரிகை என அனுப்பி, அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவரையும் மிரட்டி பணம் சம்பாதிப்பதாகவும் கூறப்படுகிறது. அதுவும் தற்போது தீபாவளி நேரம் என்பதால் பலர் ஒன்று கூடி இதுபோன்று நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஐ.ஏ.எஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றி பணத்தை பறித்துவிடுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்யப்படும்.
மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகள் பயன்படுத்தி, பொதுமக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசுப் பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை, பத்திரிகையாளர் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தகவல் தெரிவிக்கும்படி, அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக 94980-42428 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவலை அனுப்பினால், அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.