70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது.
அதில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது. வேட்பாளர்கள் அளிக்கும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 18ஆம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் தங்களுடைய வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று (10/01/2025) தொடங்க இருக்கிறது. பொங்கல் விடுமுறைக்காக 11, 12, 14, 15, 16 ஆகிய தேதிகளில் விடுமுறை என்பதால் 10, 13, 17 ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.
'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பத்மராஜன் என்பவர் 247 வது முறையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துள்ளார். முதல் வேட்பாளராக தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தாக்கல் செய்தார். அவரைத் தொடர்ந்து கோவை மாவட்ட சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் தீச்சட்டி, சாவு மணி, பால் ஆகியவையுடன் வந்தார். 'தேர்தலில் பணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஜனநாயகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தி வேட்புமனு தாக்கல் செய்தார். இன்று மாலை 3 மணி வரை மனுதாக்கல் நடைபெறுகிறது. மூன்று மணிக்கு பிறகு இன்றைய நாளில் யார் யார் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.