கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்திற்கு வரும் சீன அதிபர் அவர்களை வரவேற்கின்றோம். இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து கொள்கின்ற நிகழ்வு மாமல்லபுரத்தில் நடப்பது வரவேற்புக்குரியது.
உலக வரைபடத்தில் மாமல்லபுரத்தை அடையாளம் காட்டக்கூடியதாக அமையும். வெறும் சந்திப்பு மட்டுமே புகழ் சேர்ப்பதல்ல. இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துகின்ற வகையில் இரண்டு தலைவர்களுடைய பேச்சுவார்த்தை அமைந்தால் சந்திப்பு புகழ் பெறும்.
ஆனால் அதே சமயத்தில் இந்தியா வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அமெரிக்கா உடனான வர்த்தக உறவுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டதை சரி செய்வதற்காக இந்தியாவுடன் உறவாட சீனா விரும்புகிறது. உலகத்திலேயே மிகப்பெரிய வலுவான உற்பத்தித்துறையை கொண்டது சீன நாடு. உற்பத்தி செய்கின்ற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றால் சீன பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். பொருட்களை விற்பதற்கு இந்தியா உலகிலேயே மிகப்பெரிய சந்தை என்பது எல்லா நாடுகளுக்கும் தெரியும்.
இந்த சந்திப்பு, மேம்படுத்தப்பட்ட உறவு சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களை இந்தியாவில் விற்பதற்கு வழிவகை செய்யுமானால் அது இந்திய உற்பத்தித்துறைக்கு பின்னடைவாக அமையும். பொருளாதார வீழ்ச்சியிலே சிக்கி இருக்கின்ற இந்தியா மேலும் பாதிப்புகளை சந்திக்கின்ற சூழலுக்கு தள்ளப்படும். அதனால் தான் இந்தியா மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.
காஷ்மீர் பிரச்சினையில் சீனாவின் தலையீடு இல்லை என்று அறிவித்து நமக்கு மகிழ்ச்சி உண்டாக்குவது போல செய்துவிட்டு பாகிஸ்தான் பொருட்கள் இறக்குமதிக்கு சீனாவில் வரி கிடையாது என்று அறிவித்திருப்பது வர்த்தக ரீதியாக இந்தியாவுக்கு எதிரான நிலை, அதே சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலை. பாகிஸ்தானுக்கு ஆதரவான சீனாவின் இந்த அறிவிப்பு பொருளாதார ரீதியாக பாகிஸ்தான் வளர உதவும். இந்த சூழ்நிலையில் தான் சீன அதிபர் நட்பு வேண்டி இந்தியாவுக்கு வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், வெளியுறவுத்துறையும் கவனத்தோடு கையாள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.