திமுக - காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து துண்டு பிரச்சுரம் வழங்கும் நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் ஏற்பாடு செய்தது. அதில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவின் மாநில தலைவர் அஸ்லம்பாஷா செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் பேசியதில்,
இந்தியாவில் நடைபெற உள்ள தேர்தல் என்பது இந்திய ஜனநாயகத்துக்கும் சர்வதிகரியாக இருப்பவர்கள் இடையில் நடக்கும் தேர்தல் என்பதை பொதுமக்கள் உணர்ந்து விட்டார்கள். ஒருவேளை இந்தியாவிலேயே மறுபடியும் பிரதமராக மோடி வந்துவிட்டால் ஜனநாயகம் செத்துப்போகும். இனிமேல் தேர்தல் என்பதே நடைபெறாது என்பதை மக்கள் உணர வேண்டும். இதனால் மோடி பிஜேபியை பாடி பிஜேபி ஆக்கி இந்திய தேசத்திற்கு அப்பால் புதைக்கப்பட வேண்டும், ஜனநாயகத்தின் வழியாக மக்கள் நலன் கருதி மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
இன்று ஜிஎஸ்டி போன்ற திட்டத்தினால் இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிறு பெரு தொழில்கள் மூடப்பட்டு, வேலை இல்லா திண்டாட்டம் உருவாகியுள்ளது. மக்களுடைய காவலாளியாக இருக்கவேண்டிய நரேந்திரமோடி பெரும் முதலாளிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் காவலாளியாக இருந்துக்கொண்டு இந்தியாவின் பொருளாதாரத்தை கோமா நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இன்று மக்களிடைய வாக்கு கேட்டு வருபவர்கள் யார் என்றால் தர்மபுரியில் பஸ்சை எரித்தவர்கள், கோத்ராவில் ரயில் எரித்தவர்கள், மக்களுடைய குடிசைகளை எரித்தவர்கள் தான் மீண்டும் மக்களிடம் ஓட்டு கேட்க வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை மக்கள் உணர வேண்டும்.
மோடி அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள், அவர்களுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படுத்தாத கட்சி தலைவர்களின் மீதுயெல்லாம் வருமானவரித்துறையை சோதனை என்ற பேரில் ஏவி அவர்களை மிரட்டி வைப்பதற்கும், தேர்தலில் நிற்பதற்கு பயம் ஏற்படுத்தவும் தான் மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள் ஈடுபடுவது மக்கள் அறிவார்கள். இந்த மிரட்டலுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு திராவிட கூட்டணி பயப்படாது. இதை தேர்தல் நேரத்தில் நடக்கின்ற ஒரு வேடிக்கையான சம்பவம் என்று சொல்ல வேண்டும் என்றார்.