உள்ளாட்சித் தேர்தலையொட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்ட தேர்தல் இன்று (டிச. 27) நடந்தது. முதல்கட்டமாக 156 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடந்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த, நெடுங்குளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவம்பாளையத்தில்தான் வாக்குரிமை உள்ளது. இதையடுத்து அவர், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்காகவே, சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 11.20 மணிக்கு வந்து சேர்ந்தார்.
அங்கிருந்து கார் மூலம் சிலுவம்பாளையத்திற்குச் சென்ற அவர், வீட்டில் இருந்த அவருடைய மனைவி ராதா, மகன் மிதுன், மருமகள் திவ்யா ஆகியோரையும் அழைத்துக்கொண்டு சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 6வது வார்டுக்கு உட்பட்ட 83ம் எண் வாக்குச்சாவடிக்கு சென்றார்.
பகல் 12.20 மணிக்கு அவர் வாக்குச்சாவடி சென்றிருந்தார். அப்போது ஓரளவு வாக்காளர்கள் கூட்டமும் இருந்தது. முதல்வரும் குடும்பத்தினருடன் மக்களுடன் மக்களாக வரிசையில் சென்று பகல் 12.40 மணிக்கு வாக்களித்தார்.
இந்த வாக்குச்சாவடியில் 234 பெண்கள், 257 ஆண்கள் என மொத்தம் 491 வாக்காளர்கள் உள்ளனர்.
நெடுங்குளம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 9 வார்டுகளுக்கும் ஏற்கனவே போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. இதனால் அந்த வாக்குச்சாவடியில் வாக்களித்த வாக்காளர்கள் 3 பதவிகளுக்கு ஆள்களை தேர்வு செய்வதற்காக மூன்று வண்ண சீட்டுகள் மூலம் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
முதல்வர் வருகையையொட்டி, சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் காவல்துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே சாவடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.