தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (20.03.2023) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து துறைவாரியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அதன்படி செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் எம்.எல்.ஏவுமான வேல்முருகன் பேசுகையில், “வருமான வரி கட்டக் கூடியவர்கள், ஆண்டு ஒன்றுக்கு லட்சக் கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் குடும்ப அட்டைதாரர்களாக, குடும்பத்தின் தலைவிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையிலேயே ஏழை எளிய குடும்ப தலைவிகளுக்கு இந்த ஊதியம் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் உரிமைத் தொகையை கிடைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பத்திரப் பதிவு துறையில் பதிவுக் கட்டணம் நான்கு விழுக்காட்டிலிருந்து இரண்டு விழுக்காடாக குறைக்கப்பட்டு இருப்பது; காலை உணவுத் திட்டம் 30,122 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பாமக சார்பில் வரவேற்கிறோம்” என்றார். அதேபோல் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “பள்ளிக்கூடங்களில் காலை உணவு திட்டம் என்ற சிறப்பான திட்டம் அறிவிக்கப்பட்டு அந்த காலை உணவு திட்டம் இந்த பட்ஜெட்டில் 30,122 பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களுக்கு விரிவு படுத்தப்படும். இதனால் 12 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருக்கிறது” என்றார்.