தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்தவர் வனிதா (26, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரி பெண். பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர் தீர்மானித்து இருந்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் காட்டுக்கொட்டகை பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியியல் பட்டதாரி யோகேஷ் (28) என்பவர், தரகர்கள் மூலம் விவரங்களை அறிந்து, வனிதாவை பெண் கேட்டுச் சென்றார்.
கடந்த ஜூலை மாதம் யோகேஷ் பெண் பார்க்கச் சென்றபோது, தன்னுடன் தாயார் ஜீவா (52), சின்ன சேலத்தைச் சேர்ந்த அவருடைய மாமா தமிழரசன் (39), அக்கா ஜெயஸ்ரீ (34) ஆகியோரையும் அழைத்துச் சென்றிருந்தார். இருதரப்புக்கும் பிடித்துப்போன நிலையில், செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். பெண் பார்க்கும் படலத்தின்போதே வனிதாவுக்கும், யோகேஷூக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போனது. நிச்சயதார்த்த தேதியும் முடிவு செய்ததால், இருவரும் அப்போது முதல் சகஜமாக அலைபேசியில் பேசி வந்துள்ளனர்.
அலைபேசிவழி பேச்சு, சில நாள்களிலேயே நேரடி சந்திப்பு வரை சென்றது. பின்னர் இருவரும் வார இறுதி நாட்களில் ஒன்றாக பல இடங்களுக்கும் ஒரே வாகனத்தில் சென்று வரும் அளவுக்கு நெருங்கிப் பழகத் தொடங்கினர். இந்த நெருக்கம் அவர்களை திருமணத்திற்கு முன்பே தனிமையில் இருக்கும் அளவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. வார விடுமுறை நாட்களில் வெளியே செல்லும் இவர்கள் சொகுசு விடுதிகளில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இது மட்டுமின்றி யோகேஷ், புதிய உடைகள், மோதிரம் வாங்க வேண்டும் எனக்கூறி வனிதாவிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார்.
தன்னுடனான நெருக்கத்தை திடீரென்று யோகேஷ் குறைத்துக் கொண்டதால், இதுபற்றி விசாரித்தபோதுதான் வனிதாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனிதா, யோகேஷின் வீட்டிற்கே சென்று சட்டையைப் பிடித்து கேள்வி எழுப்பினார். அப்போது அவர், வனிதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். அவருடைய தாயார், மாமா, அக்கா ஆகியோர் வீட்டுக்கு வந்து பிரச்சனை செய்தால் தீர்த்துக்கட்டி விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
யோகேஷ்தான் எதிர்காலத்தில் தனது கணவராக வரப்போகிறான் என்று எண்ணியிருந்த வனிதாவால், தான் ஏமாற்றப்பட்டதை தாங்க முடியாமல், அரூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் யோகேஷ், அவருடைய தாயார், அக்கா, மாமா ஆகிய நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் திடீரென்று தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில் அரூர் பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த யோகேஷை, காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மற்ற மூவரையும் தேடி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் யோகேஷை அரூர் சிறையில் அடைத்தனர்.