![hh](http://image.nakkheeran.in/cdn/farfuture/_IvNti40bA0td38Tidwux925ANxmD4YagBMvQ-blUcE/1630948402/sites/default/files/inline-images/1111111_172.jpg)
தமிழகத்தில் ஜவுளி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், கடைகளில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்திலும் உட்கார முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், அந்த பணியாளர்கள் கடும் மன உளைச்சல்களுக்கும் அவஸ்தைகளுக்கும் ஆளாகி வருகிறார். இந்த நிலையில், ஊழியர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், சட்டத் திருத்த மசோதா ஒன்றை, பேரவையில் தாக்கல் செய்தார் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன்.
![hh](http://image.nakkheeran.in/cdn/farfuture/aT-pqg-YM8x93EEo786wAXtZcdslt3_yjnUovCJJXRk/1630948529/sites/default/files/inline-images/000000_10.jpg)
"தமிழகத்திலுள்ள வர்த்தக நிறுவனங்கள், பெரிய பெரிய ஜவுளிக் கடைகள் என பெரும்பாலான கடைகளில் பணிபுரியும் ஆண், பெண் பணியாளர்கள், அவர்களது வேலை நேரம் முழுவதும் நின்றபடியே பணி புரிந்து வருகின்றனர். இதனால், பல்வேறு உடல் நல உபாதைகளுக்கு ஆளாகின்றனர். அப்படிப்பட்ட பணியாளர்களின் நிலைமையைக் கருத்தில்கொண்டு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அனைத்து வேலையாட்களுக்கும் உட்கார இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கடந்த 4-ந்தேதி நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பணியாளர்களுக்கு இருக்கை வசதி வழங்கும் சட்டத்திருத்த மசோதா ஒன்றைக் கொண்டு வரலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது. குழுவில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களால் ஒத்த கருத்துடன் இந்த யோசனை ஏற்கப்பட்டது.
தமிழக அரசு மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை அதற்குத் தகுந்தவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது" என்று அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பின்னர் இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் பெரிய ஜவுளி நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும், கடைகளில் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்திலும்கூட , சிறிது நேரம் உட்கார முடிவதில்லை. அதற்கான இருக்கை வசதிகளைச் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் ஏற்படுத்தியும் தருவதில்லை.
இதனால் கடைகளில் பணிபுரியும் இளம்வயது ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் தங்களது பணி நேரம் முழுவதும் நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்படுவதன் காரணமாக, பல்வேறு உடல் உபாதைகளையும் சந்தித்து வந்தனர். கால் வலியால் அவதிப்படும் சூழலும், அதனால் மன உளைச்சல்களிலும் அவதிப்பட்டனர்.
அதனைப் போக்கும் வகையில் , தொழிலாளர்களின் உடல் நலன் மீது அக்கறை கொண்டு, தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை தடுக்கும் வகையில் இந்த சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியிருக்கிறார் அமைச்சர் சி.வி.கணேசன். இந்த சட்ட மசோதா, தொழிலாளர்களிடம் மட்டுமல்ல, அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இனி வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் உருவாகியுள்ளது.