கோவில்பட்டி அருகே தலையில் அடிப்பட்ட சிறுமி ஒருவர் அங்குள்ள அரசு மருத்துவமனைக்குத் தனது தந்தையுடன் சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர் தலையில் அடிப்பட்டுள்ளதால் சிடி ஸ்கேன் எடுத்துவரும் படி கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து மாணவியின் தந்தை மருத்துவமனையில் உள்ள சிடி ஸ்கேன் எடுக்கும் அறைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர் தலையில் அடிப்பட்டிருக்கும் மாணவியையும் பொருட்படுத்தாமல் சொல்போன் பார்த்துக்கொண்டு கையை அசைத்து வெளியே செல்லும்படி அலட்சியமாக நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை அந்த மருத்துவமனையின் ஊழியரிடம் சார் அடிப்பட்டு இருக்கு நீங்க இவ்ளோ அலட்சியமா பதில் சொல்றிங்க என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த மருத்துவர், நான் மீட்டிங்கில் இருக்கிறேன்; நீங்க போய் உங்களுக்கு ஸ்கேன் எழுதிக் கொடுத்த டாக்டரிடம் சொல்லுங்க, அவங்க கிட்ட நான் பேசுகிறேன் என்று அலட்சியமாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர்கள் மருத்துவமனை ஊழியரின் செயல் குறித்து தலைமை மருத்துவரிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு மாணவிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று மருத்துவரை இளைஞர் ஒருவர் குத்திய சம்பவம் அரங்கேறிய நிலையில், தற்போது தலையில் அடிப்பட்ட பள்ளி மாணவிக்கு ஸ்கேன் எடுக்காமல் அலட்சியப்படுத்திய ஊழியரின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.