![employee of Annamalai University attempted lost their life](http://image.nakkheeran.in/cdn/farfuture/wUTBXOuNF8D4rdATDkJHaMAEfjS5n2Oa_sCH4ZkA7iw/1680587228/sites/default/files/inline-images/th-2-2_51.jpg)
"13 வருஷமாவே போராட்டம் போராட்டம் போராட்டம் தாங்க. எங்களால முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு. முதல்வரிடம் மனு கொடுத்தும் ஒன்னும் நடக்கவில்லை" எனக் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் திடீரென தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு அருகே உள்ளது அண்ணாமலை பல்கலைக்கழகம். இங்கு, கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக 205 பேர் தொகுப்பு ஊதிய ஊழியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். நீண்ட காலமாக இவர்களுடைய மாத ஊதியம் என்பது ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகும் தொகுப்பு ஊழியர்கள், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவி சாய்க்காத நிலையில், கடந்த 13 ஆம் தேதி முதல் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தை அறிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தொகுப்பு ஊழியர்களின் இந்த போராட்டம் 11 நாட்களை கடந்தும், பல்கலைக்கழகம் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த முத்துலிங்கம் என்பவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்று வெளியிட்டு பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது, இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், அவரை மீட்டு ராஜா முத்தையா கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் தொகுப்பு ஊழியர் முத்துலிங்கத்திற்கு நியாயம் கேட்டு 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி தலைமையிலான போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில் அங்கிருந்த அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அதே சமயம் பல்கலைக்கழக வளாகத்தில் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.