அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம், “அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் ஏரிக்குளங்களைத் தூர்வாரும் பணிக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “கரோனா பரிசோதனை செய்தவர்களை வைத்துக்கொண்டும், தினமும் பரிசோதனையினை செய்துகொண்டும் ஏரிக்குளங்களை தூர்வாரும் பணியினை செய்ய அனுமதி அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும், கரோனா லாக்டவுன் காலத்திலும் விவசாயப் பணிகளுக்கு தடை விதிக்கவில்லை அரசு. இதிலிருந்து உணவு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்துள்ளது தமிழக அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசு.
உணவை உற்பத்தி செய்ய நீர் அவசியம். எனவே நீரினைப் பாதுகாக்கவும் சேமிக்கவும் ஏரிக்குளங்களைத் தூர்வாருவது அவசியம். எனவே அத்தியாவசியப் பணிகள் பட்டியலில் ஏரிக்குளங்களைத் தூர்வாரும் பணிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இதுகுறித்து மேலும் அவர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், “கடந்த ஆண்டு அதிமுக அரசு கொண்டுவந்த லாக்டவுனில் ஏரிக்குளங்களைப் பராமரிக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு, தமிழகத்தில் பல ஏரிக்குளங்களில் பாதி வேலையே நடந்துள்ளது. எனவே, அத்தியாவசியப் பணிகளாக ஏரிகுளங்களைத் தூர்வாரும் பணி அமைய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.