இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகவும் தீவிரமாகவும் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் கடந்த 20ஆம் தேதியிலிருந்து இரவு நேர ஊரடங்கும், வாரம்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவுநேர ஊரடங்கை கண்காணிக்கவும், மக்கள் முறையாகக் கடைப்பிடிக்கவும் தமிழகம் முழுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால், இரவு நேர ஊரடங்கு பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அந்த அறிவுரையில், சென்னையில் இரவு நேர ஊரடங்கு பணிகளில் பொதுமக்களிடம் எந்தவிதத்திலும் கெடுபிடியாக நடக்க வேண்டாம். இரவு நேர ஊரடங்கில் கண்காணிப்பு பணியில் கவனம் செலுத்தும் அதேவேளை, பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அரசின் வழிகாட்டு நடைமுறைகளுக்குட்பட்டு உரிய தேவைகள் மற்றும் அத்தியாவசிய அவசர பணிகளுக்காக செல்லும் பொதுமக்களை அனுமதிக்கலாம். அதுவும் உரிய ஆவணங்களை சரிபார்த்து அனுமதிக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.