கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் (16-12-23) இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டும் வருகின்றன. மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தென் மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாகத் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும், மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு செய்வதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த சில தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து அரசு சார்பில் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த கால நீட்டிப்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி, மின் உபயோகிப்பாளர்களின், மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள் 18.12.2023 முதல் 30.12.2023 வரை இருந்த நிலையில், அதிகனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அபராதத் தொகை இல்லாமல் 02.01.2024 அன்று வரை மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணத்துடன் 18.12.2023 அன்று அபராதத் தொகை செலுத்தி இருப்பின், அந்த அபராதத் தொகை அடுத்து வரும் மாத மின் கட்டணத் தொகையில் சரிக்கட்டப்படும். இந்த கால நீட்டிப்பு வீடு, வணிக பயன்பாடு, தொழிற் சாலைகள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மற்றும் பிற மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் பொருந்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.