கோடை வெயில் வெளியே தலைகாட்ட முடியவில்லை. ஒவ்வொரு நாளும் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் கோடிக் கணக்காண மரங்கள் உடைந்து நாசமானதால் சாலை ஓரங்களில் ஒதுங்கி நிற்க கூட நிழல் இல்லை. அதனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. மரங்கள் நின்றால் வெயிலின் தாக்கம் குறைந்து இருக்கும். ஆனால் மரங்கள் இல்லை.
இந்த நிலையில் தேர்தல் நடப்பதால் வேட்பாளர்கள் ஓட்டுக் கேட்க மக்களை சந்திக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இருந்தாலும் தேர்தலுக்கு இன்னும் 18 நாட்களே இருப்பதால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியாதே..
இந்த நிலையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் மேட்டுப்பட்டி கிராமத்தில் அ.தி.மு.க கூட்டணி தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் பிரசாரத்தை தொடங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். கடும் வெயிலை சமாளிக்க பொலிரோ சரக்கு லாரியில் குடை அமைத்து வெயிலை சமாளித்து வருகிறார்.
கூட வந்தவர்களோ.. எடப்பாடி, ஒ.பி.எஸ். கூட திறந்த வேனில் நின்று தான் பேசுறாங்க. என்ன செய்றது வெயில் அதிகமா இருப்பதால் டாக்டர் இளங்கோவன் தனது வாகனத்துக்கு குடை அமைத்துவிட்டார் என்றனர்.