டெங்கு நோய், வைரஸ் நோய் ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் கிசிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அத்தொகுதியின் எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி புதன்கிழமை சென்றார்.
இம்மாதத்தில் இதுவரை 6 பேருக்கு மட்டுமே டெங்கு கண்டறியப்பட்டதாகவும், அதில் 5 பேர் சிகிச்சைக்கு பின்பு நலம் பெற்று சென்றுள்ளதாகவும், ஒரு குழந்தை மட்டுமே தற்போது இருப்பதாகவும், அந்த குழந்தையும் வியாழக்கிழமை வீடு திரும்பி விடும் என்றும் மருத்துவர்கள் கூறினர். தினமும் 3 ஆயிரம் புற நோயாளிகள் வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் சந்தித்து மருத்துவ சேவை குறித்து விசாரித்தார். கூடுதல் நோயாளிகளின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு, கட்டில் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு தமிமுன் அன்சாரி அறிவுறுத்தினார்.
பிறகு உணவு கூடத்திற்கு சென்று சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்த அவர், நிலவேம்பு கசாயத்தை குடித்து, மற்றவர்களுக்கும் விநியோகித்தார்.
இங்கு தினமும் 3 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் தயாரித்து பொதுமக்கள் கூடுமிடங்களில் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்தனர். பிறகு ஆயுர்வேதம், சித்தா, யுனானி பிரிவுகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இங்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் சிசிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் கூறினர். இங்கு இதற்காக புதிய கட்டிடம் கட்ட முயற்சி செய்வதாகவும் எம்எல்ஏ கூறினார்.
இந்த ஆய்வின்போது தலைமை மருத்துவர் காதர், நிலைய மருத்துவ அதிகாரி முருகப்பன், மருத்துவர் கலா (JD) ஆகியோரும் உடனிருந்தனர்.