கடந்த மார்ச் 12- ஆம் தேதி நக்கீரன் இணையத்தில் “பத்து நாளைக்குத்தான ஆடுவ! அப்புறம் என்ன பண்ணுறேன் பாரு!”- தேர்தல் பறக்கும் படையை மிரட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜு! என்னும் தலைப்பில், வாகன சோதனையில் ஈடுபட்ட நேர்மையான அதிகாரி மாரிமுத்து, அமைச்சரால் அவமானப்படுத்தப்பட்டு, நாலாட்டின் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், அமைச்சர் தந்த அழுத்தத்தின் காரணமாக, கோவில்பட்டி தொகுதியின் பறக்கும்படை குழுத் தலைவரான மாரிமுத்துவை, விளாத்திகுளம் தொகுதிக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தனர்.
இடமாற்ற உத்தரவு குறித்து, ‘அமைச்சர் கடம்பூர் ராஜுவால் மிரட்டப்பட்ட பறக்கும்படை அதிகாரிக்கு டிரான்ஸ்பர்!- தேர்தல் ஆணையம் இழைத்த அநீதி!’ என்னும் தலைப்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அளித்திருந்த விளக்கத்தில் உண்மைக்கு மாறான தகவல் இருந்ததைச் சுட்டிக்காட்டி, இன்று (14/03/2021) நக்கீரன் இணையத்தில், ‘ஃபாலோ அப்’ செய்தி வெளியிட்டோம்.
நக்கீரன் இணையச் செய்தியின் எதிரொலியாக, ‘தப்பு பண்ணிட்டோம்.. தப்பு பண்ணிட்டோம்..’ என்று பகிரங்கமாக ஒத்துக்கொள்ளாவிட்டாலும், விளாத்திகுளம் தொகுதியின் பறக்கும்படை குழுத் தலைவராக இடமாற்றம் செய்யப்பட்ட மாரிமுத்துவை, திரும்பவும் கோவில்பட்டி தொகுதியில் பணியாற்றச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர்.