மரக்காணம் ஒன்றியத்தில் இருபத்தாறு ஒன்றிய கவுன்சிலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் 17 திமுக உறுப்பினர்கள், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்று, அதிமுக மூன்று, பாமக 2, சுயேச்சை மூன்று என களம் கண்டனர். இதில் 14 கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தால் சேர்மனாக முடியும் என்ற நிலையில், திமுக 16 கவுன்சிலர்களைக் கொண்டு பலமாக இருந்தது. இந்நிலையில், மாவட்டச் செயலாளரும் மந்திரியுமான செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர் தயாளன் சேர்மனாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. திமுகவைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தனக்கும் கவுன்சிலர்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி போட்டியில் குதித்தார்.
ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் இருவரும் சேர்மன் பதவிக்கு முட்டி மோதியதால் கடந்தமுறை சேர்மனை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நடைபெற முடியாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதன் காரணமாக கண்ணன் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறி கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 22ஆம் தேதி தேர்தல் நடத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, 22ஆம் தேதி அன்று மரக்காணம் ஒன்றிய சேர்மன் தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தயாளன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து கடைசிநேர விருப்ப மனு தாக்கல் செய்தார் கண்ணனின் ஆதரவாளர் அர்ஜுனன். இதையடுத்து தேர்தல் நடைபெற்றது. இருபத்தாறு கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர். இதில் தயாளன் 14 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அர்ச்சுனன் 12 வாக்குகளும் பெற்றனர். இதனால் தயாளன் சேர்மனாக வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து போட்டியின்றி ஒருமனதாக துணை சேர்மனாக பழனி என்பவரை தேர்வு செய்தனர். இதில் வெற்றிபெற்ற சேர்மன் தயாளன், துணைச் சேர்மன் பழனி ஆகியோருக்கு அமைச்சர் மஸ்தான் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
இதற்கிடையே தேர்தல் நடத்தும் அலுவலர்களைக் கண்டித்து அர்ச்சுனன் ஆதரவாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனிடையே, மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று நியாயம் கேட்போம் என்று தோல்வியடைந்த அர்ஜுனன் ஆதரவாளர்கள் கூறிவிட்டு கலைந்து சென்றுள்ளனர். மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட மரக்காணம் ஒன்றிய சேர்மன் தேர்தல் ஒருவழியாக நடத்தி முடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடம் ஒருவித அமைதியை ஏற்படுத்தியுள்ளது.