ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டமாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கடந்த 6ம் தேதி பதவி ஏற்றனர். இதையடுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி துணை தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் நாளை 11ம் தேதி நடைபெற உள்ளது.
மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி அலுவலகத்திலும், ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர் தேர்தல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி துணை தலைவர் தேர்தல் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி துணை தலைவர் பதவிகளுக்கான தேர்தல் காலை 11 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர்களுக்கான தேர்தல் பிற்பகல் 3 மணிக்கும் நடைபெற உள்ளது. போட்டியில்லாத இடங்களில் தலைவர்கள், துணை தலைவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். போட்டி இருக்கும் இடங்களில் மறைமுக வாக்கெடுப்பு நடைபெறும்.
தேர்தல் நடைபெற உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி தலைவர் அலுவலகங்களில் நாளை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதால் தேர்தல் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நாளை நடைபெற உள்ள தேர்தல் நடைமுறை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படவிருக்கிறது.