திருப்பூர் ரயில் நிலையத்தில் ‘தகவல் மையம்’ என தமிழில் எழுதப்பட்டிருந்ததை மறைத்து ‘சகயோக்’ என இந்தியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் அகற்றப்பட்டது.
தமிழகத்திலுள்ள ரயில் நிலையங்களில் பொதுவாக, தகவல் பலகைகளை தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒட்டியோ அல்லது எழுதியோ வைத்திருப்பது வழக்கம். அதேபோல், ரயில்களின் அறிவிப்புகளும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்றே இருக்கும்.
இந்நிலையில், கடந்த சில தினங்கள் முன்பு திருப்பூர் ரயில் நிலையத்தில் ‘தகவல் மையம்’ என்றிருந்த இடத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலுமே சகயோக் என்று இந்தியில் படிக்கும்படியான வார்த்தையிலான பதாகை ரயில்வே நிர்வாகத்தால் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, அது சேவை மையம் என்று தமிழிலும், இன்ஃபர்மேசன் சென்டர் என்று ஆங்கிலத்திலும் இருந்திருக்க வேண்டும்.
எந்த மொழியில் படித்தாலும் இந்தி வார்த்தை வாசிக்கும்படி இருந்த பதாகைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரயில்வே அதிகாரிகளால் இன்று அது அகற்றப்பட்டது.