தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்களில் ஒன்று திருச்சி சமயபுரம் கோயில். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவர். இந்த சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரத்தில் 7 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த ராஜகோபுரம் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாரை சேர்ந்த இரட்டை சகோதரர்களான பொன்னர் சங்கர் மூலமாக திருப்பணி செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கோபுரத்திற்கு இன்று கும்பாபிஷேக விழா நடந்தது.
இந்தக் கும்பாபிஷேக விழாவிற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். காலை 6.55-ல் இருந்து 7.15 வரை சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட பக்தர்கள், இன்னும் சில விஷயங்களை சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும், கும்பாபிஷேக விழாவில் சில குளறுபடிகளும் நடந்தன.
இந்த ராஜகோபுரம் திருப்பணி மேற்கொண்ட முக்கிய பங்குதாரர்களான பொன்னர், சங்கர் என்பவர்களுக்கும், சமயபுரம் கோயில் இணை ஆணையரான கல்யாணிக்கும் ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் இருந்ததால் இரு தரப்பினருக்கும் ஒத்துப் போகாத நிலை இருந்து வந்துள்ளது. பொன்னர் மற்றும் சங்கர் மீது கடந்த அதிமுக ஆட்சியில் மணல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், இவர்கள் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் பினாமிகள் எனவும் குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள்.
ஆனால், தற்போது பொன்னர், சங்கர் மற்றும் கோயில் இணை ஆணையர் கல்யாணிக்கும் பழைய பகைகள் குறைந்து சுமுகமான நிலை உருவானதால் மூவரும் இணைந்து இந்த கும்பாபிஷேகத்தை வழிநடத்தினர். கும்பாபிஷேக விழாவை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப சேட்டிலைட் சேனல்களுக்கு கோபுரத்தின் மேலே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதேசமயம், திருச்சியில் உள்ள ஒரு உள்ளூர் தொலைக்காட்சிக்கு மட்டும் கோபுரத்தின் மேல் செல்ல அனுமதி வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்குள்ளானது. இதன் பின்னணி குறித்து விசாரித்ததில் உள்ளூர் தொலைக்காட்சியின் உரிமையாளர், கோவில் இணைய ஆணையர் கல்யாணிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்கு மட்டும் அனுமதி வழங்கி மற்ற தொலைக்காட்சிகளை கோபுரத்தின் மேல் செல்ல அனுமதிக்காமல் தவிர்த்து உள்ளார் எனக் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, காவல்துறையும் சரியான பாதுகாப்பு கொடுக்காததால் மக்கள் அவதியுற்றனர் என கும்பாபிஷேக விழாவுக்கு வந்த பக்தர்கள் தெரிவித்தனர். அதற்கேற்றார்போல், அதிகாலை 3.30 மணி அளவில் அனைத்து கதவுகளும் பூட்டப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேரம் கடந்தும் கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. அதேபோல், அமைச்சர் வருகையின் போது போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் கோயிலுக்குள் கூட்டம் அதிகமாகியது. இதனை காவல்துறையினர் மிகுந்த சிரமப்பட்டு கட்டுப்படுத்தினர்.
பொதுவாக கோயிலுக்குள் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முக்கியஸ்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அனுமதி சீட்டு வழங்கப்படும். ஆனால், இன்று சமயபுரம் கோயிலில் சீமான் நடராஜன், வ.உ.சி கண்ணன், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேர் அந்த அனுமதி சீட்டுகளை வழங்கி உள்ளனர். இதனால், கோயில் பணியாளர்களுக்கு கூட உரிய அனுமதிச்சீட்டு வழங்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், சமயபுரம் கோயிலின் முழு அதிகாரமும் இந்த மூன்று பேர் கையில் உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான விளக்கத்தைப் பெற கோயில் இணை ஆணையர் கல்யாணியைத் தொடர்புகொண்டபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. அவர் தரப்பு விளக்கம் தரப்பட்டால் அதுவும் வெளியிடப்படும்.