Skip to main content

ஸ்ரீரங்கம் கோவிலில் 4ஆம் நாள் ஏகாதசி விழா...

Published on 18/12/2020 | Edited on 18/12/2020

 

Ekadasi 4th day festival at Srirangam temple ..


ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழாவின் 4ஆம் நாளான இன்று, நம்பெருமாள் கிருஷ்ணர் சவுரிகொண்டை, வைர அபயஹஸ்தம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். 

 

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றி வணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த 15ஆம் தேதி மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 

 

21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் 'திருவாய்மொழி திருநாட்கள்' எனப்படும் பகல்பத்து திருநாளின், 4ஆம் நாளான இன்று, காலை 6.35 மணிக்கு நம்பெருமாள் கண்ணனெனும் கருந்தெய்வம் மற்றும் நாச்சியார் திருமொழி அடங்கிய 105 பாசுரத்திற்கேற்ப கிருஷ்ணர் சவுரிகொண்டை, வைர அபயஹஸ்தம், மார்பில் மகாலட்சுமி பதக்கம், பவள மாலை, முத்துச்சரம், காசுமாலை ஆகிய ஆபரணங்கள் சூடியபடி தங்கப் பல்லக்கில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழியெங்கிலும் அரையர்கள் பாசுரங்கள் பாடியதைக் கேட்டபடி, ஆழ்வார்கள் பின்னே புடைசூழ தொடர்ந்துவர, உள்பிரகாரங்களின் வழியே வந்தபடி கண்ணாடி சேவை கண்டருளி, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளச்செய்தார். அங்கு ஆழ்வார்களுக்கு அருளமுதம்செய்து, பக்தர்களுக்குப் பொது ஜனசேவை கண்டருளினார். திருவாபரணங்கள சூடியபடி அதிகாலைப்பொழுதில் சேவைசாதித்த பூலோக வைகுண்டப்பெருமாளை அர்ச்சுன மண்டபத்தில் ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு ஏராளமான பக்தர்கள் வணங்கினர்.

 


 

சார்ந்த செய்திகள்