Skip to main content

காவிரி படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து பாலையாக்குவதா? அன்புமணி கண்டனம்

Published on 12/03/2018 | Edited on 12/03/2018


 

காவிரி படுகையில் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைத்து பாலையாக்குவதா? ஒதமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரிப்பாசன மாவட்டங்கள் நமது கண் முன்பே அழிவதை அனுமதிக்க முடியாது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு அடுத்தடுத்து பெட்ரோலியத் திட்டங்களைச் செயல்படுத்தி பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. கண்ணியமாக வாழ ஆடை கேட்ட மக்களுக்கு அவற்றைத் தராமல், அவர்கள் ஏற்கனவே அணிந்திருந்த கோவணத்தையும் பறித்துக் கொள்வது எவ்வளவு குரூரமானதோ, அதே போன்றது தான் மத்திய அரசின் இந்த திட்டங்களும்.
 

இந்தியாவில் எண்ணெய் வளங்களைக் கண்டறிந்து உற்பத்தி செய்வதற்காக ஹைட்ரோ கார்பன் வளங்களைக் கண்டறிதல் மற்றும் உரிமம் வழங்கும் கொள்கையை(Hydrocarbon Exploration and Licencing Policy- HELP) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கொள்கையின்படி அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன் வளங்களை கண்டறியவும், எடுக்கவும் ஒரே உரிமம் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி தமிழகத்தில், கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வரையிலான 731 சதுர கி.மீ பரப்பளவிலான பகுதியில் குறிஞ்சிப்பாடி அருகே ஒரு கிணறு, புவனகிரி பகுதியில் 6 கிணறுகள், சிதம்பரம் பகுதியில் 3 கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இவை தவிர, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரை 10 கிணறுகள், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் கடலூர் வரை 4 கிணறுகள் என மொத்தம் 24 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 3&ஆம் தேதிவரை பெறப்பட்டு ஜூன் மாதம் உரிமங்கள் வழங்கப்படும். 
 

புதிதாக அமைக்கப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் வளங்களும் எடுக்கப்படலாம். காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது என்றும் நாடாளுமன்ற மக்களவையில் எனது வினாக்களுக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இருமுறை பதிலளித்திருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் விரோதமான வகையில் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் வளங்களை காவிரி பாசன மாவட்டங்களில் எடுக்க முயல்வது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். அத்துடன், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள 65 ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் 24 திட்டங்களை காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்த முயல்வது அப்பகுதிகளை பாலைவனமாக மாற்றும் சதி என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக அனுமதிக்கமாட்டார்கள்.
 

இயற்கை வளம் மிகுந்த காவிரி பாசனப் பகுதிகளை எண்ணெய்க் கிணறுகளாக மாற்றும் சதியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. காவிரிப் பாசன மாவட்டங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிகூட பெறாமல் மொத்தம் 189 எண்ணெய்க்கிணறுகளை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அடுத்தக்கட்டமாக நாகை மாவட்டம் நரிமணத்தில் செயல்பட்டு வரும் 10 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையை ஆண்டுக்கு ஒரு கோடி டன் திறன் கொண்ட ஆலையாக விரிவாக்கம் செய்ய தீர்மானித்திருக்கிறது. இதற்காக 600 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தரும்படி தமிழக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. நரிமணம் ஆலை விரிவாக்கப்பட்டால் அதற்கு எண்ணெய் வழங்குவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணெய்க் கிணறுகளை அமைக்கவேண்டியிருக்கும். இதனால் காவிரி பாசனப் பகுதியின் வளம் சீரழிக்கப்படும். 
 

அதுமட்டுமின்றி, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க மத்திய அரசும், தமிழக அரசும் முடிவு செய்திருக்கின்றன. இத்தகைய சூழலில், 24 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டமும் செயல்பாட்டுக்கு வந்தால் ஒட்டுமொத்த காவிரிப் பாசன மண்டலமும் பாலைவனமாக மாறுவதை தவிர்க்க முடியாது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரிப்பாசன மாவட்டங்கள் நமது கண் முன்பே அழிவதை அனுமதிக்க முடியாது. காவிரிப் பாசன மாவட்டங்களை எண்ணெய் வள மண்டலமாக மாற்றவேண்டும் என்பதற்காகவே காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக விவசாயிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.
 

நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வளங்களை கண்டறிவதையும், உற்பத்தி செய்வதையும் குறைகூற முடியாது. ஆனால், விலைமதிப்பற்ற வேளாண் வளத்தை அழித்துவிட்டு, எண்ணெய் வளத்தை உருவாக்குவது கண்களை விற்று சித்திரம் வாங்கிய கதையாகவே அமையும்.
 

எனவே, காவிரிப் பாசன பகுதிகளில் இதுவரை செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிதாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, வேளாண்மை செழிப்பதற்குத் தேவையான உதவிகளை செய்யவேண்டும்.
 

சார்ந்த செய்திகள்