![Edappadi Palaniswami's action announcement by removing 18 people from the party, including O. Panneerselvam's sons!](http://image.nakkheeran.in/cdn/farfuture/D_9x6o5RVvKHRsf_wGGWtrBnMMs-1_eYbyfvrjA5v1g/1657803424/sites/default/files/inline-images/eps323111_1.jpg)
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் உட்பட அவரது ஆதரவாளர்கள் 18 பேரைக் கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துக் கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், வெங்கட்ராமன், கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க.வின் தேனி மாவட்டச் செயலாளர் சையது கான், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன், புதுச்சேரி மேற்கு மாநிலச் செயலாளர் ஓம்சக்தி சேகர், ப.ரவீந்திரநாத் எம்.பி., வி.ப.ஜெயபிரதீப், கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், ரமேஷ், வைரமுத்து, வினுபாலன், கிருஷ்ணமூர்த்தி, சைதை எம்எம் பாபு, அஞ்சுலட்சுமி ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.