'ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும் பயிர் சேதங்களை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டது' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திமுக அரசு பொறுப்பேற்று 28 மாதங்கள் ஆன பிறகும் மக்களுடைய பொது தேவைகளை நிறைவேற்ற முடியாத அரசாக உள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானிசாகர் உள்ளிட்ட தொகுதிகளுக்கான மலைப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி ஆகியவற்றால் விவசாயிகளின் பயிர்கள் சேதப்படுத்தப்படுகிறது. இந்த விலங்குகளால் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பயிர் சேதங்களை தடுத்து நிறுத்துவதற்கு திமுக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
காட்டுப்பன்றியை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க கோரியும், பயிர் சேதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே வரும் அக்டோபர் மூன்றாம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகிப்பார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.