பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி, இன்று (30/10/2022) காலை 11.00 மணியளவில் சென்னை நந்தனத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். அதேபோல், திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கும் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதைச் செலுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா, பா.வளர்மதி, பாண்டியராஜன், ஓ.எஸ்.மணியன் மற்றும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரும் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதைச் செலுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தேசியமும், தெய்வீகமும் வளர்த்து, தமிழர்களைத் திரட்டி நேதாஜியின் இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்த்து, சாதிய பாகுபாட்டை எதிர்த்த திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் அவர் பெரும்புகழை போற்றி சென்னை நந்தனத்தில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. ஒட்டுமொத்த உளவுத்துறையின் தோல்வி தான் கோவை சம்பவத்திற்கு காரணம்" என்று குற்றம் சாட்டினார்.