Skip to main content

“எங்கே போனார்கள் சமூகப் போராளிகளும் நடிகர்களும்?” - இ.பி.எஸ் காட்டம்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

edappadi palanisamy met drinking counterfeit liquor and inquired about their well-being!

 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த நிலையில், 66 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறியதுடன் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

 

இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. விளையாட்டு மைதானத்தில், வணிக வளாகத்தில் மது விற்பனைக்கு அரசு அனுமதியளித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும் என்றார்கள். ஆனால் கள்ளச்சாராயம்தான் ஓடுகிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களும் தாராளமாகக் கிடைக்கின்றன. எந்த சமூகப் போராளியும் நடிகரும் கள்ளச்சாராய மரணத்திற்கு குரல் கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் பல பேர் சாராயத்தை பற்றி பாட்டு பாடினார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் தற்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் பின்புலம் உள்ளவர்கள் விற்பனை செய்த சாராயத்தால் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எந்தவித கட்சி பேதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்” என்றார். 

 

இதனிடையே இந்த விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது. விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

 

மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பையும் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 2 ஆய்வாளர்கள், 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், காஞ்சிபுரம் எஸ்.பி.யாக உள்ள எம்.சுதாகர் கூடுதல் பொறுப்பாக செங்கல்பட்டு மாவட்ட (பொறுப்பு) எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.பி. மோகன்ராஜ் கூடுதல் பொறுப்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு டி.ஐ.ஜியாக உள்ள ஜியா உல்ஹக் விழுப்புரம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்