
சென்னை கானத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுடன் கடந்த 25ஆம் தேதி இரவு முட்டுக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 6க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தியுள்ளனர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் மற்றும் அச்சமடைந்த பெண்கள் காரை பின்னோக்கி (ரிவர்ஸ்) இயக்கியபடி சுமார் 4 கிலோ மீட்டர் அளவிற்குச் சென்று வீட்டை அடைந்தனர்.
அதே சமயம் இளைஞர்களும் அவர்களின் காரை கொண்டு துரத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெண்களை தூரத்தியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு பெண்களை தூரத்தியவர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “கடந்த 25.1.25 அன்று நள்ளிரவில் இந்த சம்பவம் தாம்பரம் ஆணையரக கானத்தூர் காவல் நிலைய எல்லையில் நடந்துள்ளது.
பெண்கள் பயணித்த கார் மற்றொரு காருடன் மோதியதால் அந்த சொகுசு காரில் இருந்தவர்கள் இந்த காரை துரத்தி நியாயம் கேட்டுள்ளனர். அப்போது ரிவர்ஸ் எடுக்கும்போது கார் மோதி உள்ளது. பின்பு இரு தரப்பினரும் சமாதானம் ஆகியுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர். வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் இது தொடர்பாக விசாரித்து வருகிறார். வழியில் மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.