தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் என, ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த டிஒய்எஃப்ஐ அமைப்பினர், குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பிய சம்பவம், கோவையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆளுநர் ஆர்.என் ரவியின் சனாதன தர்மம் தொடர்பான பேச்சுக்கும், திராவிடத்துக்கு எதிரான கருத்துக்கும் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒருகட்டத்தில், ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியின் எம்பிக்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு கடிதம் கொடுத்தனர். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ரவி அனுமதி வழங்காமல் தொடர்ந்து மௌனம் காக்கிறார். இத்தகைய செயல்பாடுகளால், தமிழக அரசை இயங்கவிடாமல் காலம் தாழ்த்தி வருவதாக திமுக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதில் முக்கியமான ஒன்றுதான் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் மசோதா.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகள், தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், பல்வேறு குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை தமிழகத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளுக்குத் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், இளைஞர்களின் உயிரிழப்புக்கு காரணமான ஆளுநரை கண்டித்து, கோவை மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து போராட்டத்தை தொடங்கிய டிஒய்எஃப்ஐ (DYFI) அமைப்பினர், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரியும், தமிழக ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற்ற வலியுறுத்தியும் கண்டன கோசங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து, தபால் நிலையத்திற்குச் சென்ற இளைஞர்கள், ஆளுநர் பதவி விலகக் கோரி இந்திய குடியரசுத்தலைவருக்கு மனு அனுப்பினர். அப்போது, அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட டிஒய்எஃப்ஐ அமைப்பினரை, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைது செய்துவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.