புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாண்டித்துரைக்கு சொந்தமாக சிப்காட் பகுதியில் சாலைகளில் பிரதிபலிக்கும் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் புதுக்கோட்டை பூங்கா நகரைச் சேர்ந்த சதீஷ் கடந்த 7 ஆண்டுகளாக மேற்பார்வையாளராக உள்ளார். நம்பிக்கையாக உள்ள சதீஷ்க்கு நிறுவனப் பணிகளுக்கு செல்ல கார் வழங்கியதுடன் அந்த காருக்கு பூங்குடி ராமன் என்ற இளைஞர்கள் கடந்த மூன்று வருடமாக ஓட்டுநராக உள்ளார்.
இந்த பாண்டித்துரைக்கு திருவண்ணாமலையில் நிறுவனங்கள் உள்ளதால் மேற்பார்வையாளர் சதீஷ் அடிக்கடி அங்கு சென்று வருவதுடன் அந்த நிறுவன ஊழியர்களுக்கான சம்பளம் கொடுக்க புதுக்கோட்டையில் இருந்து காரில் பணம் கொண்டு போவதும் வழக்கம். அதே போல 5 ந் தேதி ரூ.82.67 லட்சம் பணத்தை பண்டல்களாக கட்டி ஓட்டுநர் ராமனுடன் காரில் புறப்பட்டுச் சென்ற போது சற்று நேரத்தில் திருச்சி - காரைக்குடி தேசியநெடுஞ்சாலையில் உள்ள கட்டியாவயல் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு பெட்ரோல் போட காரை நிறுத்திய ராமன் சிறுநீர் கழிக்கச் செல்வதாக இறங்கிச் சென்று மீண்டும் காருக்கு திரும்பி வந்த போது பணத்துடன் இருந்த மேற்பார்வையாளர் சதீஷ் சிறுநீர் கழிக்கச் சென்று திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த பணத்துடன், கார் ஓட்டுநர் ராமனையும் காணவில்லை. சதீஷ் சிறுநீர் கழிக்கச் சென்ற சில நிமிடங்களில் அருகிலேயே நின்ற பொலிரோ காரில் ராமன் ஏறிச் சென்றதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நிறுவன உரிமையாளர் பாண்டித்துரைக்கும், திருக்கோகர்ணம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனே அங்கு வந்த போலீசார் விசாரணை செய்து ஓட்டுநர் ராமனுக்கு போன் செய்தால் போன் சுவிட்ஸ் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதனால் அவர் கடைசியாக பேசிய எண்ணை பார்த்து அந்த எண் ராமனின் சகோதரர் லெட்சுமணன் எண் என்பது தெரிய வந்தது. அந்த எண்ணும் சுவிட்ஸ் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் பணத்தை காரில் கடத்திச் சென்றவர்கள் ஓட்டுநர் சகோதரர்கள் தான் என்பதை உறுதி செய்த போலீசார் இருவரது செல்போன் எண்களையும் யார் யாருக்கெல்லாம் பேசியுள்ளனர் என்பதை ஆய்வு செய்த போது பூங்குடி செல்வமணி, புத்தாம்பூர் சண்முகம் ஆகியோருடன் அதிகம் பேசியிருந்ததும் கடைசியாக அவர்களிடம் பேசியதும் தெரிந்தது.
அதனால் அவர்கள் இருவரையும் தூக்கி வந்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதாவது, சதீஷுக்கு ஓட்டுநராக உள்ள ராமன் எங்களிடம் நான் அடிக்கடி பணத்துடன் திருவண்ணாமலை போவேன். இந்த மதம் சம்பளம் கொடுக்க பணத்துடன் கிளம்பும் போது சொல்றேன் காருடன் தயாராக இருங்கள் நான் பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தி சிறுநீர் கழிக்கப் போவேன். மேற்பார்வையாளரையும் போக வைக்கிறேன். அந்த நேரம் வந்துவிட்டால் நாம் பணத்துடன் வேறு காரில் ஏறி போய்விடலாம் என்று அவரது தம்பி லெட்சுமணன் உட்பட எங்களை அழைத்தார். அவர் சொன்னது போல போய் காத்திருந்து பணத்தை அள்ளிக் கொண்டு வந்து அவங்க தோட்டத்தில் பண்டல்களாக மண்ணை தோண்டி புதைத்து வைத்திருக்கிறோம். அதில் கொஞ்சம் பணத்துடன் ராமனும் லெட்சுமணனும் எங்கோ சென்றுவிட்டனர். மீதி பணம் புதைக்கப்பட்டுள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் அங்கே நிற்கிறது என்று கூறியுள்ளனர்.
அவர்கள் சொன்ன ராமனின் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த பண்டல்களை தோண்டி எடுத்த போது ரூ.75 லட்சம் மட்டுமே அதில் இருந்தது. மீதிப் பணத்துடன் ஓட்டுநர் சகோதரர்கள் தப்பிச் சென்றதும் தெரிய வந்தது. கடத்தல் காரும் நின்றதைப் பார்த்து மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேவுக்கு போலீசார் தகவல் கொடுக்க விரைந்து வந்த எஸ்பி மீட்கப்பட்ட பணம் மற்றும் காரை பார்வையிட்டார். மேலும், பூங்குடி செல்வமணி, புத்தாம்பூர் சண்முகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய ஓட்டுநர் சகோதரர்களை தேடி வருகின்றனர். பணம் பறிபோய் ஒரு நாளுக்குள் திருடர்களையும் பணத்தையும் மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.