விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் பகுதியில் உள்ளது சு. பில்ராம்பட்டு கிராமம். இந்தக் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கடையின் அருகே அதே ஊரைச் சேர்ந்த 67 வயது உலகநாதன் என்ற பெரியவர் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்துவந்துள்ளார். நேற்று (06.12.2021) மாலை அரகண்டநல்லூர் போலீசார் உலகநாதன் கடைக்குச் சென்று அரசு டாஸ்மாக் கடை அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தக் கூடாது எனவே கடையை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். அப்போது பெரியவர் உலகநாதன், நான் இங்கு நான்கு வருடமாக கடை நடத்திவருகிறேன்.
அப்படியிருக்கும்போது என் கடையைத் திடீரென வந்து காலி செய்ய சொல்வது ஏன்? என்று எதிர்த்து கேள்வி கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கோபமடைந்த போலீசார், உலகநாதனிடம் பெட்டிக்கடையை மூடிவிட்டு, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளனர். அப்போது போலீசாருக்கும் உலகநாதனுக்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருந்த சமயத்தில் உலகநாதன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த அவரது மனைவி ராணி மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து உலகநாதனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உலகநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த உலகநாதன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். தனது கணவர் இறப்பு குறித்து அவரது மனைவி ராணி விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ‘என் கணவர் பெட்டிக்கடையில் பீடி, சிகரெட், வெற்றிலை பாக்கு, மிட்டாய், பிஸ்கட், சுண்டல், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை சிறிய அளவில் வைத்து விற்பனை செய்துவந்தார்.
இந்த நிலையில், நேற்று 4 போலீசார் அவரது கடைக்குச் சென்று வியாபாரம் செய்யக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். எனது கணவர் எதிர்த்து கேள்வி கேட்டதால் அவரை அடிக்க முயன்றனர். அதை என் கணவர் தடுத்துள்ளார். போலீசார் லத்தியால் தாக்கியதில் எனது கணவர் இறந்துவிட்டார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, எனது கணவர் இறப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது கணவர் உயிரிழப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று அவர் புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். போலீசார் தாக்குதலில் வயதான முதியவர் இறந்து போனதாக கூறி சு. பில்ராம்பட்டு கிராம மக்கள் பெரும் கோபம் கொண்டுள்ளனர். இதனால் பதற்றம் நிலவியதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.