![The driver who drove the government bus to the hospital to save the conductor..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/r_yRh7z4GKrwGnbzsyH7QV-LnyTNl-qQ4gq_xUs0lf4/1609920124/sites/default/files/inline-images/th-1_254.jpg)
திருச்சி ஸ்ரீரங்கம், கீழ அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (42). இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
திருச்சியில் இருந்து வழக்கம்போல் இன்று (06.01.2021), முதல் பயணமாக சிவகங்கை சென்று வந்தார். மீண்டும் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள பேருந்து பணிமனைக்குச் சென்று, சிறிது நேரம் ஓய்வு எடுத்தப் பிறகு, அங்கிருந்து புறப்பட்டு அடுத்த பயணமாக சிவகங்கை நோக்கிச் செல்ல மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது ஜங்ஷன் மேம்பாலம் ரவுண்டானா பகுதியில் நடத்துனர் ஆறுமுகத்திற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு பேருந்துக்குள் மயங்கி விழுந்துள்ளார்.
அவர் வலியால் துடிப்பதை அறிந்த பேருந்து ஓட்டுனர், 108 ஆம்புலன்ஸுக்கு அழைத்தால் வருவதற்கு சற்று தாமதமாகும் என்பதால் பேருந்தை நேரடியாக அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அங்கே விரைந்து வந்த மருத்துவர்கள் அவரைச் சோதித்தபோது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்த இழப்பு சக நடத்துனர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.