தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே வாசன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்தார்.
அப்போது சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவகங்கையில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி பணியில் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால் பண்டைய கால விபரம் குறித்து தகவல்கள் அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு அகழ்வாராய்ச்சிக்கு தேவையான நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நீர் மேலாண்மையை டெல்டா பகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முறையாக செயல்படுத்த வேண்டும். குடிமராமத்து பணிகள் சரியான முறையில் நடைபெற அரசு கண்காணிக்க வேண்டும். காவிரி டெல்டா கடைமடை வரை பாசன நீர் செல்ல அனைத்து நடவடிக்கையும் உடனே எடுக்க வேண்டும்.
சினிமா டிக்கெட் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்ற விதிக்கு தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தை கேட்டு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும். ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை ஏற்படும். அந்த பகுதியில் பொருளாதாரம் மேம்படும் இதனை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு தொகுப்பில் தமிழக அரசுக்கு 3 மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும். பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவைகளுக்கு மானியத்தை குறைக்காமல் வழங்கவேண்டும். முதல்வரின் சுற்றுப்பயணம் மக்கள் நலம் சார்ந்தது. புதிய கல்விக் கொள்கை முறையில் மத்திய அரசு அடிதளமிட்டு செயல்படுகிறது. சிதம்பரம் பகுதியில் ஆக்கிரமிப்பில் வீடுகட்டி உள்ளார்கள் என்று இடிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் உடனே வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்றார்.
முன்னதாக சிதம்பரத்தில் சிதம்பரம் காமராஜர் பேரவை செயலாளர் ஜீவாவிஸ்வநாதன் காமராஜருக்காக 50 ஆண்டுகள் விழா எடுத்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி தொடர்ந்து அன்னதானம் வழங்கியவர் சமீபத்தில் காலமானர். அவரது வீட்டுக்கு சென்று படத்திற்கு மரியாதை செலுத்தி குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார்.
இவருடன் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் புரச்சிமணி, மாநில செயலாளர் வேல்முருகன், எஸ்சி எஸ்டி பிரிவு மாநிலசெயலாளர் எம்கே பாலா, மாவட்ட செயலாளர் நாகராஜ், நகர தலைவர் மக்கீன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரஜினிகாந்த், மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன், மாவட்டதுணைத்தலைவர் வைத்தி உள்ளிட்ட கட்சியினர் மற்றும் மகளிரணியினர் கலந்துகொண்டனர்.