வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 17.50 ரூபாய் உயர்ந்து, நடப்பு மாதத்தில் 732 ரூபாயாக அதிகரித்துள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மானியம் அல்லாத காஸ் சிலிண்டர், வர்த்தக காஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சந்தைத்தேவை, உற்பத்தித்திறன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஆகிய காரணிகளின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமற்ற காஸ் சிலிண்டர் விலை 17.50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதைடுத்து, நடப்பு டிசம்பர் மாதத்தில் அவ்வகை காஸ் சிலிண்டர் விலை சேலத்தில் 732 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இவ்வகை சிலிண்டர் 714.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இவ்வகை சிலிண்டர் விலை 696.50 ரூபாயில் இருந்து 714 ரூபாயாக அதிகரித்துள்ளது. மானியம் பெறக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு, உரிய மானியத்தொகை அவரவர் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு விடும்.
அதேபோல், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர்களின் விலையும் 14.50 ரூபாய் அதிகரித்துள்ளது. அதையடுத்து அவ்வகை சிலிண்டர் விலை சேலத்தில் நடப்பு டிசம்பர் மாதத்தில் 1297.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பரில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 1283 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 1319ல் இருந்து 1333 ரூபாயாக உயர்ந்துள்ளது.