![DMK STRUGGLE IN VIRUTHACHALAM](http://image.nakkheeran.in/cdn/farfuture/06RgUNt4xn13noqtBe4dJVgv0uB0D9YWKoNkDQsoJUw/1588852834/sites/default/files/inline-images/IMG-20200507-WA0022_2.jpg)
கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில் மதுக்கடை திறப்பது ஆபத்தானது. மாவட்டத்தில் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் என பலரும் கரோனா காலத்தில் தங்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமங்கள் இருந்தாலும் இருந்தை வைத்து மனைவி, பிள்ளைகள் குடும்பம் நடத்தி வந்தனர். மேலும் குடி நோயாளிகள் கடந்த 40 நாட்களாக மது பழக்கம் மறந்து குடும்பத்தோடு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் மதுபானக்கடைகளை அரசு திறந்துள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவுவதற்கு வாய்ப்பாக ஏற்படும். சட்ட ஒழுங்கு பிரச்சினைகள், விபத்துகள், குடும்ப பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் அதிகரிக்கும். எனவே மதுக்கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தி தி.மு.க சார்பில் இன்று காலை அவரவர் பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பட்டை அணிந்தும் மதுக்கடைகளை மூடக்கோரி முழக்ககங்கள் எழுப்பினர்.
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முட்டத்திலுள்ள அவரது வீட்டில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதேபோல் மேற்கு மாவட்ட செயலாலர் வெ.கணேசன் எம்.எல்.ஏ அவரது வீட்டில் கருப்பு சட்டை அணிந்து முழக்கங்களை எழுப்பினார். இதேபோல் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தி.மு.கவினர் விடுகளிலும், குழு குழுவாகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
![DMK STRUGGLE IN VIRUTHACHALAM](http://image.nakkheeran.in/cdn/farfuture/t0MXHPC10bLIgIYUTstejwTZCLSrEhWkDZXR9xSGQe4/1588852875/sites/default/files/inline-images/FB_IMG_1588841699055.jpg)
விருத்தாசலம் கடைவீதியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் இராமு தலைமையிலும், பெரியார்நகர் உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்ட பொருளாளர் தியாக.இளையராஜா தலைமையிலும், பேருந்து நிலையம் அருகே மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.கணேஷ்குமார் தலைமையிலும் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரியார் நகரில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அங்கு வந்த டி.எஸ்.பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என வாக்குவாதம் செய்தனர். அதையடுத்து கலைந்து சென்றனர்.
![ி](http://image.nakkheeran.in/cdn/farfuture/GAU64QlLGhJw_CJ1wrJAp2qBGjoNYq5ZjoUk3JFzSUU/1588853681/sites/default/files/inline-images/500x300-article-inside-ad-gif_338.gif)
ஆர்ப்பாட்டத்தின் போது, “ மாநில அரசே! அ.தி.மு.க அரசே! திறக்காதே…. திறக்காதே…. டாஸ்மாக் கடையை திறக்காதே! புரியலையா…. புரியலையா…..கொரானா தீவிரம் புரியலையா!?
பிடுங்காதே…. பிடுங்காதே…. உழைப்பவர்களின் காசை பிடுங்காதே! தேவையா…..தேவையா…. இந்த வாய்க்கரிசி காசு தேவையா!?
அறுக்காதே…. அறுக்காதே…தாய்மார்களின் தாலியை அறுக்காதே!
மூடிவிடு….மூடிவிடு… டாஸ்மாக்கை மூடிவிடு!
வாழவிடு….வாழவிடு… நிம்மதியாய் மக்களை வாழவிடு!! என முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.