தமிழகத்தைக் கஞ்சா , கள்ளச்சாராயம், டாஸ்மாக் மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்கள் தள்ளாடும் நிலைமைக்கு திமுக அரசு கொண்டுசென்றதாகக் கூறி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரேமலதா விஜயகாந்த், “எதற்கெடுத்தாலும் முன்னே வந்து நிற்கும் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பகுதியில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இதுவரை ஏன் வந்து சந்திக்கவில்லை? தனது மகனை அனுப்பி 10 லட்ச ரூபாய் நிவாரணத்தை வழங்கியது ஏன்?
ஒட்டுமொத்த தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது தங்களின் இல்லத்தின் வாசல் முன்பே கருப்பு சட்டை அணிந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது ஆட்சிக்கு வந்து அதை ஏன் செய்யவில்லை, அதேபோல் ஸ்டாலின் தங்கை கனிமொழி தமிழக முழுவதும் டாஸ்மாக்கினால் விதவைகள் அதிகமாக உள்ளதாகக் கூறிய பொழுது தற்பொழுது திமுக ஆட்சி வந்த பின்பு ஏன் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை? எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுக்கு பாதுகாப்பான அரசு எனச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் எத்தனை பெண்கள் தற்பொழுது தங்களது கணவரை இழந்து வாடி வருகின்றனர். இதற்கு என்ன பதில் கூறுவார். நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தப்படும் எனத் தெரிவித்தார் இதுவரை தமிழகத்தில் எத்தனை சாலை சரியாக உள்ளது? கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிரிழப்புக்கு என்ன காரணம் என டெல்லி அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் இந்த விவகாரத்தை சிபிஐ வழக்காக மாற்ற வேண்டுமெனவும் மக்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டும்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அமைத்த பேருந்து நிறுத்தத்தை ஏன் அகற்றினீர்கள்? இதுதான் உங்களது பணியா? பணத்தை வைத்து மக்களின் வாயை மூடி விடலாம் என நினைக்கும் இந்த அரசை நம்ப கூடாது அதேபோல் இந்த சம்பவத்திற்கு காரணம் இரண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான். திமுக அமைச்சர் முத்துசாமி இத்தனை உயிர் இழப்புக்கு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இது இந்த பட்டியலின மக்கள் வேறு எங்காவது உயிரிழந்தால் வாய் திறக்கும் நிலையில், தற்போது இங்கு நடந்த உயிரிழப்புக்கு ஏன் திரைத்துறையினர் வாய் திறக்கவில்லை? இந்தக் கள்ளச்சாராயத்தில் உயிர் இழந்தவர்களுக்கு பணம் வழங்கிய இந்த அரசு உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கும் மீனவர் குடும்பத்திற்கும் பணம் வழங்குகிறதா? என கேட்டுகொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரூ.10 லட்சம் கொடுத்தது இதற்கு தீர்வு கிடையாது. இது பெண்களைப் பாதுகாக்கும் அரசு கிடையாது. ஆயிரக்கணக்கான பெண்கள் தாலி இழந்து வாழ்க்கை இழந்து உள்ளனர். உண்மைக்கு புறம்பானவை மட்டுமே சட்டசபையில் முதலமைச்சர் பேசியுள்ளார். சிபிசிஐடி விசாரணை வைத்து அனைத்தும் மூடி மறைக்க பார்க்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் கள்ளக்குறிச்சியில் உள்ள திமுக எம்எல்ஏக்கள் திமுகவை சேர்ந்தவர்கள் மட்டும்தான். வழக்கை சிபி.ஐ க்கு மாற்றக் கோரி தேமுதிக தொடர்ந்து போராடும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்” என்றார்.