வரி கட்டுபவர்கள் முதல் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள் வரை அனைவரின் கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றம் இருக்கிறது. நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பின் மூலம் சமூகத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் ‘முடியாது நமது வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று நினைத்தவர்களுக்குக் கூட தனது தீர்ப்பின் மூலம் வாழ்வைத் திருப்பித் தந்திருக்கிறது. மறுபுறம் சமூகத்தின் கேடை எந்த ஒரு பாரபட்சமின்றி துடைத்தெறிந்திருக்கிறது. அப்படிப்பட்ட உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு கொடுத்த முக்கியமான தீர்ப்புகளில் முக்கியமானவை இங்கே. இதில் பல தீர்ப்புகள் பாராட்டுகளையும், சில தீர்ப்புகள் சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தியது.
மாநில அரசு அதிகாரத்தை உறுதி செய்த உச்சநீதிமன்றம்:
கடந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இவர்கள் ஆறு பேரும் ஏறத்தாழ 30 வருடங்களாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர். இதில், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தொடர்ந்து நடத்திய சட்ட போராட்டத்தாலும், தமிழ்நாடு அரசின் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தினாலும் முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் இறுதி வாதத்தின்போது உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரர் ராவ் தலைமையிலான அமர்வு, “மாநில அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். மாநில ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல முடியாது. அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்” என்று தெரிவித்தது. இது பேரறிவாளன் விடுதலை என்று மட்டும் பார்க்காமல், உச்சநீதிமன்றம் மாநில அரசின் அதிகாரத்தை உறுதி செய்த விதமாகவும் பலரால் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை வைத்து தங்களையும் அதே அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் வரவேற்றாலும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் குதித்தது.
ஹிஜாப்;
இந்தாண்டு கர்நாடகாவில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் இஸ்லாமிய மாணவர்கள் ஹிஜாப் அணிய தடை விதித்தது. சீக்கியர்கள் டர்பன் அணியவும், கிறிஸ்தவர்கள் ஜெபமாலை அணியவும், இந்துக்கள் பூணூல் அணியவும், இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணியவும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதி இருக்கும்போது எங்களுக்கு மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது என இஸ்லாமிய மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர். ஒரு புறம் இந்துமதம் சார்ந்த அமைப்புகள், மறுபுறம் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்த கர்நாடகா முழுவதும் பதற்றம் சூழ்ந்தது.
இது இப்படி இருக்க, மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றதால், சில மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு வருவதையே நிறுத்தி விட்டனர். இருப்பினும் சில பெண்கள், ‘உடை சுதந்திரம் எங்களுக்கு இருக்கு; நாங்கள் விரும்பிய உடையை நாங்கள் அணிவோம்’ என்று ஹிஜாப் அணிந்து தைரியமாக கல்லூரிக்கு வந்தனர். இஸ்லாமிய மாணவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு, "இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் சட்டத்தில் அத்தியாவசியமானது இல்லை. கலாச்சாரத்தை அடிப்படையிலேயே ஹிஜாப் அணியப்படுகிறது. கலாச்சாரம் வேறு மதம் வேறு. பள்ளி சீருடை விதிகள் மீறுவது சரியல்ல. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும்" எனத் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு ஹிஜாப் தடைக்கு ஆதரவாக ஒரு நீதிபதியும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கியது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில் ஹிஜாப் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
ஆணாதிக்க சோதனைக்குத் தடை:
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமைக்கு உள்ளானாரா என்பதைக் கண்டறியும் இருவிரல் பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு முதல் தடை விதித்தது. பெண்ணின் கன்னித்திரை கிழியாமல் இருக்கிறதா என்பதை இருவிரல் கொண்டு சோதிக்கப்படும் முறையே இருவிரல் சோதனை. இந்த பரிசோதனை முறைக்குத் தடை விதித்தது உச்சநீதிமன்றத்தின் அன்றைய நீதிபதியான சந்திரசூட் (தற்போது இவர் தலைமை நீதிபதியாகவுள்ளார்), நீதிபதி ஹிமா கோலி கொண்ட அமர்வு. இந்தத் தீர்ப்பின்போது, ‘பாலியல் பாதிப்புக்குள்ளான பெண்ணின் பாலியல் வரலாற்றைத் தெரிந்துகொள்ள இதுபோன்ற சோதனை நடத்தப்படுவது வருத்தமளிக்கிறது. இந்த சோதனை பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்ணுக்கு மீண்டும் உடல்ரீதியாக அதிர்ச்சி தரும் வகையில் இருக்கும். இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை. இந்த சோதனை ஆணாதிக்க மனோபாவம் கொண்டது. இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை" என நீதிபதிகள் தெரிவித்து இந்தச் சோதனைக்குத் தடை விதித்தனர்.
10 சதவீத இட ஒதுக்கீடு:
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித் அடங்கிய ஐந்து பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் 3 நீதிபதிகள் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்றும், இரண்டு நீதிபதிகள் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர். இதில் பெரும்பான்மை நீதிபதியின் தீர்ப்பான பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று இறுதியாக முடிவானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமணமாகாத பெண்களுக்கும் உரிமை கொடுத்த தீர்ப்பு:
இந்தியாவில் திருமணமான பெண்கள் 20 - 24 வாரங்கள் உள்ள தங்களது கருவை சட்டப்படி பாதுகாக்கவும் மற்றும் கலைக்கவும் உரிமை இருப்பதுபோல், திருமணமாகாமல் கருத்தரித்த பெண்ணுக்கும் இந்த உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மணிப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனது ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்துள்ளார். அதில் அந்த பெண் கருத்தரித்தும் உள்ளார். ஆனால் இறுதியில் அந்தப் பெண்ணை அவரது ஆண் நண்பர் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிடவே, தன் வயிற்றில் இருக்கும் 23 வார கருவைக் கலைக்க அனுமதி வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், திருமணமாகாத நிலையில் வயிற்றில் 20 வாரங்களைக் கரு கடந்து விட்டது என்றும், அதனால் கருவைக் கலைக்க அனுமதி வழங்க முடியாது என்றும் தீர்ப்பளித்தது. மேலும் குழந்தை பிறந்த பிறகு உங்களுக்கு வேண்டாம் என்றால் அதனை அரசிடம் ஒப்படைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இதனை எதிர்த்து அந்தப் பெண், திருமணமான பெண்களுக்கு மட்டும் கருக்கலைக்கும் உரிமை இருப்பதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, திருமணமாகாத பெண்களுக்கும் தங்களது 20-24 வார கருவைக் கலைக்கும் உரிமை உண்டு என்று கூறி தீர்ப்பளித்தார்.
பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு:
பாலியல் தொழில் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதில், 18 வயதைக் கடந்தவர்கள் தனது சொந்த விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்டப்பூர்வமானதுதான். அநேகமான நேரங்களில் காவல்துறை பாலியல் தொழிலாளர்களை மோசமாக நடத்துகிறது. ரெய்டு செய்யும்போது விருப்பத்துடன் இந்த தொழிலில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும் கூடாது; அபராதம் விதிக்கவும் கூடாது. அவர்களை உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ துன்புறுத்தாமல் அவர்களுக்குத் தேவையான சட்ட மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும்" என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இது தினம் தினம் உடலளவில் பாதிப்புகளைச் சந்தித்து வரும் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஜி.எஸ்.டி. கவுன்சில்:
இந்தியா முழுவதும் ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமலில் உள்ளது. இதில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் மேற்கொள்வதற்காக ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்குப் பதிலாக ஒரே வரியாக ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரைகளில் மதிப்பு இருக்கிறது. அவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுரைகளையும், பரிந்துரைகளையும் வழங்கலாம்; ஆனால் இதனைத்தான் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது என உத்தரவிட்டது.
இலவசம் தொடர்பான வழக்கு:
தேர்தலின் போது, அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கத் தடை கோரி பாஜகவின் தலைமை வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் நடைமுறைக்கு ஒத்து வராத இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அக்கட்சியின் பதிவை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இது காலம்காலமாக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நலத்திட்டங்களை வழங்கி வரும் திராவிடக் கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தவே இவ்வழக்கில் திமுக தங்களையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொண்டது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதில், "இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளைத் தடுக்க முடியாது; அதே சமயத்தில் இலவசங்களையும் வளர்ச்சி திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது. இலவசங்களை அறிவிப்பதில் அனைத்துக் கட்சிகளும் ஒரே பக்கத்தில்தான் நிற்கின்றனர். இருந்தாலும் இது ஆராயப்பட வேண்டிய விஷயம்" எனத் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக ஏன் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்கக்கூடாது என்று கேள்வி எழுப்பியதோடு, இலவசங்கள் அறிவிப்பது குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் குழு ஒன்று அமைத்தும் உத்தரவிட்டு வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிடப்பட்டது.
பில்கிஸ் பானு:
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் கோத்ரா கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரின் மூன்று வயது குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கைதாகி நீதிமன்றத்தினால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளை குஜராத் அரசு சில மாதங்களுக்கு முன்பு விடுதலை செய்தது. குற்றவாளிகளின் விடுதலைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் கண்டங்களைத் தெரிவித்தனர். அதிலும் அவர்கள் விடுதலையின்போது சிறை வாசலிலேயே மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு கொடுத்தது சர்ச்சையாகி மேலும் பல விவாதங்களைக் கிளப்பியது. பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதனைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
தேசத் துரோகச் சட்டம்;
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசத் துரோக சட்டப்பிரிவு 124 ஏ, கடந்த 152 ஆண்டுகளாக இந்தியாவில் அமலில் உள்ளது. இது அரசியலமைப்புக்கு எதிரானது. மத்திய மாநில அரசுகள் இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்று கூறி இதனை நீக்கவேண்டும் என்று கர்நாடகாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கில் வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்ப்பில் தேசத்துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது.